டெல்லி: இந்தியாவில் நேரடி அந்நிய முதலீட்டின் அளவு கடந்த ஆண்டு ஏப்ரல் தொடங்கி இந்த ஆண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் 22.2 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி இந்த 11 மாதங்களில் அந்நிய முதலீடு 26 பில்லியன் டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டு 33.34 பில்லியன் டாலராக உள்ளது.
இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததுதான் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த 11 மாத காலத்தில் உலோகத்துறை, எண்ணெய், எரிவாயு மற்றும் ரசாயனத் துறையில் மட்டுமே 7 சதவீத வெளிநாட்டு மூலதனம் அதிகமாகக் கிடைத்துள்ளது. ஆனால் ஐடி துறையில் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
சர்வீஸ் செக்டார் எனப்படும் சேவைத் துறையில் மட்டும் 31 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. புதிய முதலீடுகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லாத நிலை காணப்படுகிறது, இந்தத் துறையில்.
தொலைத் தொடர்புத் துறையில் கிட்டத்தட்ட 50 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. 2009-1010-ல் 2.55 பில்லியன் டாலராக இருந்த அந்நிய முதலீடு, 2010-2011-ல் 1.33 பில்லியனாக குறைந்துள்ளது. ரியல் எஸ்டேட் துறையிலும் இதே போன்ற வீழ்ச்சி காணப்படுகிறது.
ஆனால் ரிலையன்ஸ்-பிபி மற்றும் வோடபோன் – எஸ்ஸார் கூட்டு வர்த்தகம் காரணமாக 20 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. இந்த வர்த்தக உடன்பாடு எட்டாமல் போயிருந்தால், மேலும் பெரிய வீழ்ச்சியை இந்திய தொழில்துறை சந்தித்திருக்கும்.
Leave a Reply