மத்திய அரசு நிதியை பாழடித்தது மே.வங்கம் : சோனியா திடுக்கிடும் புகார்

posted in: அரசியல் | 0

ஜல்பைகுரி : “மேற்கு வங்க மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை, மாநில அரசு பயன்படுத்தவில்லை.

மக்களுக்கு கனவுகளை மட்டுமே இடதுசாரி ஆட்சி விற்றுள்ளது’ என, காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று ஜல்பைகுரியில் நடந்த பேரணியில் குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல் முன்னிட்டு, முதன் முறையாக, நேற்று, ஜல்பைகுரியில் நடந்த பேரணியில், காங்கிரஸ் தலைவர் சோனியா பேசியதாவது: மாநிலத்தில் அரசு மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. காங்கிரஸ், திரிணமுல் கூட்டணிக்கு மக்கள் ஓட்டு போட வேண்டும். ஆட்சி மாற்றம் கொண்டுவர வேண்டும். மாநில அரசுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கியது. ஆனால், இதன் பயனை எங்கும் பார்க்க முடியவில்லை.

மத்திய அரசு கொடுத்த நிதி எங்கே செலவழிக்கப்பட்டது என, இடதுசாரி அரசை மக்கள் கேட்க வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை போல, முன்பு யாரும் நிதி உதவி செய்தது இல்லை. அனைத்து தரப்பு மக்களுக்கும், காங்கிரஸ் அரசு செய்ததை போல, முன்பு பதவியில் இருந்த காங்கிரஸ் அல்லாத அரசு செய்யவில்லை. மேற்கு வங்க மாநிலத்தின் சில மாவட்டங்கள் மிகவும் பின்தங்கி உள்ளன. பெரும்பாலான இடங்களில் விவசாயத்திற்கு நீர்பாசன வசதி இல்லை. மாநிலத்தில், மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு குடிநீர் வசதி இல்லை.

மத்திய அரசு வழங்கிய நிதியை முறையாக பயன்படுத்தி இருந்தால், நிலைமை மோசமாகி இருக்காது. 34 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு கனவுகளை மட்டுமே மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஆட்சி விற்றுள்ளது. ஏன் கனவுகளை நிறைவு செய்யவில்லை என்று நீங்கள் அவர்களை கேட்க வேண்டிய காலம் வந்து விட்டது. கம்யூனிசம் என்றால், மக்கள் ஏழைகள் ஆவார்கள் என்பது தான் அர்த்தமா? இன்சூரன்ஸ் உட்பட ஏழைகளுக்கு பாரத் நிர்மாண் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அங்கன்வாடி ஊழியர்களுக்கு காங்கிரஸ் ஆட்சி தான் சம்பளம் இரட்டிப்பு செய்தது. நகராட்சி பதவிகளில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை, காங்கிரஸ் அரசு தான் 50 சதவீதமாக அதிகரித்தது. இவ்வாறு சோனியா பேசினார்.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம்? : பேரணியில் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, “மாநில அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல், மே மாத சம்பளம் வழங்க முடியாத அளவிற்கு மேற்கு வங்க அரசு நிதி நெருக்கடியில் உள்ளது. மத்திய நிதியமைச்சர் என்ற முறையில் சொல்கிறேன், தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டியது மாநில அரசின் பொறுப்பு.

ஆளும் கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்க, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் அதிருப்தி வேட்பாளர்கள் வாபஸ் பெற வேண்டும். இன்னும் அதற்கான கால அவகாசம் உள்ளது. பொதுநலத்திற்காக சுயநலனை தியாகம் செய்ய வேண்டும்’ என்றார்.

இதற்கிடையில் இதுவரை வெளியான கருத்துக் கணிப்புகளில் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்து, காங்கிரஸ் – திரிணமுல் கூட்டணி ஆட்சி மலரும் என்ற தகவல் இக்கட்சிகளை அதிகளவில் ஊக்குவித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *