கொச்சி அணி வெற்றி கொண்டாட்டம்! * சச்சின் சதம் வீண்

மும்பை: மும்பையில் நடந்த பரபரப்பான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

சச்சின் சதம் அடித்தால், வெற்றி நழுவும் என்ற ராசி தொடர்ந்தது. மும்பை அணி கேப்டனாக இவர் அடித்த சதம் வீணானது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., “டுவென்டி-20′ தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகள் மோதின.
ஸ்ரீசாந்த் நீக்கம்:
கொச்சி அணியில் ஸ்ரீசாந்த், முரளிரதன், லட்சுமண் ஆகிய முன்னணி வீரர்கள் நீக்கப்பட்டு, திசரா பெரேரா, ரமேஷ் பவார், ஜாதவ் இடம் பெற்றனர். மும்பை அணியில் பிராங்க்ளினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, சைமண்ட்ஸ் வாய்ப்பு பெற்றார். “டாஸ்’ வென்ற கொச்சி அணியின் கேப்டன் ஜெயவர்தனா “பீல்டிங்’ தேர்வு செய்தார்.
சச்சின் அசத்தல்:
மும்பை அணிக்கு கேப்டன் சச்சின் அசத்தல் துவக்கம் தந்தார். வினய் குமார், பெரேரா ஓவர்களில் பவுண்டரிகளாக பறக்க விட்டார். மறுமுனையில் படுமந்தமாக ஆடிய ஜேக்கப்ஸ்(12), கோமஸ் பந்தில் வீழ்ந்தார்.
ராயுடு அதிரடி:
அடுத்து வந்த அம்பதி ராயுடு அதிரடியாக ரன் சேர்த்தார். சச்சினும் தன் பங்குக்கு வெளுத்து வாங்க, கொச்சி அணியின் பவுலர்களை பார்க்கவே பாவமாக இருந்தது. கோமஸ் ஓவரில் ராயுடு அடுத்தடுத்து இரண்டு சிக்சர் விளாசினார். வினய் குமார் வீசிய போட்டியின் 16வது ஓவரில் சச்சின் இரண்டு சிக்சர், பவுண்டரி அடிக்க, மும்பை ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். தொடர்ந்து பெரேரா ஓவரிலும் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். அரைசதம் கடந்த ராயுடு(53), ரன் அவுட்டானார்.
முதல் சதம்:
வினய் குமார் வீசிய போட்டியின் கடைசி பந்தை ஒரு ரன்னுக்கு தட்டி விட்ட சச்சின், ஐ.பி.எல்., அரங்கில் தனது முதலாவது சதம் எட்டினார். மும்பை அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. 66 பந்துகளில் 100 ரன்கள்(12 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசிய சச்சின், அவுட்டாகாமல் இருந்தார்.
மெக்கலம் கலக்கல்:
கடின இலக்கை விரட்டிய கொச்சி அணிக்கு பிரண்டன் மெக்கலம், ஜெயவர்தனா இணைந்து அருமையான துவக்கம் தந்தனர். மலிங்கா வீசிய 2வது ஓவரில் மெக்கலம் 3 பவுண்டரி அடித்தார். போலார்டு ஓவரில் ஜெயவர்தனா இரண்டு பவுண்டரி விளாசினார். போலார்டு, ஹர்பஜன் பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்ட மெக்கலம், மும்பை ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தார். இவர்களை பிரிக்க சச்சின் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.
“பீல்டிங்’ சொதப்பல்:
பந்துவீச்சு தவிர, மும்பை அணியின் பீல்டிங்கும் மோசமாக இருந்தது. சுலப “கேட்ச்’ வாய்ப்புகளை கோட்டை விட்டு ஏமாற்றம் அளித்தது. முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்த நிலையில், ஜெயவர்தனா(56) அவுட்டானார். தனது அதிரடியை தொடர்ந்த மெக்கலம்(81), மலிங்கா வேகத்தில் போல்டானார்.
“விஷூ’ பரிசு:பின் ரவிந்திர ஜடேஜா, பிராட் ஹாட்ஜ் இணைந்து அசத்தினர். முர்டசா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு இமாலய சிக்சர்கள் அடித்த ஜடேஜா, நேற்று “விஷூ’ கொண்டாடிய கேரள மக்களுக்கு வெற்றியை <பரிசாக அளித்தார். கொச்சி அணி 19 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்து, இத்தொடரில் தனது முதல் வெற்றியை பெற்றது. ஜடேஜா(25),ஹாட்ஜ்(11) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை பிரண்டன் மெக்கலம் தட்டிச் சென்றார். எப்போதும் முதலிடம் கிரிக்கெட் அரங்கில் சதம் அடிப்பதில் சச்சினுக்கு தான் எப்போதும் முதலிடம். டெஸ்ட்(51), ஒரு நாள் போட்டிகளில்(48) அதிக சதம் அடித்துள்ள இவர், நேற்று ஐ.பி.எல்., அரங்கில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். 66 பந்தில் 100 ரன்கள் (3 சிக்சர், 12 பவுண்டரி) எடுத்தார். இது தான் ஐ.பி.எல்., அரங்கில், இவரது அதிகபட்ச ஸ்கோர். முன்னதாக கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக 89 ரன்கள் எடுத்திருந்தார். * இது ஐ.பி.எல்., அரங்கில் பதிவு செய்யப்பட்ட 14வது சதம். தவிர இது, நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பதிவு செய்யப்பட்ட 2வது சதம். முன்னதாக பஞ்சாப் அணியின் வல்தாட்டி, சென்னை அணிக்கு எதிராக 63 பந்தில் 120 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். * இதன்மூலம் ஐ.பி.எல்., வரலாற்றில் மும்பை அணி சார்பில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக கடந்த 2008ல், சென்னை அணிக்கு எதிராக மும்பை அணியின் ஜெயசூர்யா 48 பந்தில் 114 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். * இதுவரை 38 போட்டியில் ஒரு சதம், 9 அரைசதம் உட்பட 1371 ரன்கள் எடுத்துள்ள சச்சின், ஐ.பி.எல்., அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் சென்னை வீரர் ரெய்னா (48 போட்டி, 1408 ரன்கள்) உள்ளார். * நான்காவது ஐ.பி.எல்., தொடரில் 200 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் சச்சின். இதுவரை 3 போட்டியில் பங்கேற்று ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 201 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் இத்தொடரில் அதிக ரன்கள் எடுத்துள்ள வீரர்களுக்கு வழங்கப்படும் "ஆரஞ்ச்' நிற தொப்பியை தன்வசப்படுத்தினார். இரண்டாவது இடத்தில் கோல்கட்டா வீரர் காலிஸ் (3 போட்டி, 187 ரன்கள்) உள்ளார். ஸ்கோர் போர்டு மும்பை இந்தியன்ஸ் ஜேக்கப்ஸ்(ப)கோமஸ் 12(21) சச்சின்-அவுட் இல்லை- 100(66) ராயுடு-ரன் அவுட்-(வினய்) 53(33) போலார்டு-அவுட் இல்லை- 0(0) உதிரிகள் 17 மொத்தம்(20 ஓவரில் 2 விக்.,) 182 விக்கெட் வீழ்ச்சி: 1-61(ஜேக்கப்ஸ்), 2-177(ராயுடு). பந்துவீச்சு: ஆர்.பி.சிங் 4-0-15-0, வினய் குமார் 4-0-48-0, பெரேரா 4-0-38-0, கோமஸ் 3-0-29-1, ஜடேஜா 4-0-29-0, பவார் 1-0-12-0. கொச்சி டஸ்கர்ஸ் கேரளா பிரண்டன்(ப)மலிங்கா 81(60) ஜெயவர்தனா(ப)மலிங்கா 56(36) ஜடேஜா-அவுட் இல்லை- 25(11) ஹாட்ஜ்-அவுட் இல்லை- 11(7) உதிரிகள் 11 மொத்தம்(19 ஓவரில் 2 விக்.,) 184 விக்கெட் வீழ்ச்சி: 1-128(ஜெயவர்தனா), 2-156(மெக்கலம்). பந்துவீச்சு: மலிங்கா 4-0-42-2, முனாப் 3-0-15-0, முர்டசா 4-0-37-0, போலார்டு 3-0-43-0, ஹர்பஜன் 4-0-33-0, சதிஷ் 1-0-11-0.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *