கொழும்பு: இறுதிபோரில் இலங்கை ராணுவத்தால் தமிழ் மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்று அமைச்சரும் விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுத்தவர் என்று குற்றம்சாட்டப்படுபவருமான கருணா தெரிவித்துள்ளார்.
போரின் இறுதிக் கட்டத்தில் தப்பிச் சென்ற பொது மக்களை விடுதலைப் புலிகளே கொலை செய்தனர் எனவும், புலிகளிடம் இருந்த மக்களை மீட்டது இராணுவம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சர்வதேச அரங்கில் போர்க்குற்றவாளியாக நிற்கிறது இலங்கை ராணுவம். ஐநா சபையில் சமர்ப்பிக்கப்பட்ட சர்வதேச குழுவின் அறிக்கையும் தமிழர்களை ராணுவம் படுகொலை செய்திருப்பதை உறுதிப்படுத்திவிட்டது.
இதனால் பயத்தில், எந்த தண்டனைக்கும் தயார் என வாய்க்கு வந்தபடி அறிக்கை விட ஆரம்பித்துள்ளார் ராஜபக்சே. இப்போது அவருக்கு துணையாக, புலிகளைக் காட்டிக் கொடுத்தவர், தமிழீழ லட்சியத்தை குழிதோண்டிப் புதைத்தவர் என தமிழர்களால் குற்றம்சாட்டப்பட்டு வரும் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரனும் பேச ஆரம்பித்துள்ளார்.
அவர் கூறுகையில், “பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் போரை நடத்தும் கொள்கை அரசாங்கத்தினால் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் அது விடுதலைப் புலிகளால் கடைப்பிடிக்கப்படவில்லை. ஆதலால் தான் இறுதிப்போரின் போது ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தும் காயப்பட்டும் உள்ளனர்.
மேலும், அமெரிக்காவின் உதவி ராஜாங்கச் செயலர் ராபர்ட் ஓ பிளேக் சிறிலங்காவின் உள் விவகாரங்களில் அதிகமாகத் தலையிடுகிறார் அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. இலங்கை ஒரு இறையாண்மையுள்ள நாடு என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்”, என்று அவர் கூறினார்.
Leave a Reply