வாஷிங்டன் : “உலகில் வளர்ந்து வரும் நாடுகளில், மூன்றில் இரண்டு பங்கு நாடுகள், ஏழ்மை மற்றும் பட்டினியை நன்றாக சமாளித்து, வளர்ச்சி இலக்கை அடைந்து வருகின்றன.
இதில், இந்தியாவும் ஒன்று’ என, உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக, உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாவது:உலகில் வளர்ந்து வரும் நாடுகளில், மூன்றில் இரண்டு பங்கு நாடுகள், ஏழ்மை மற்றும் பட்டினியை நன்றாக சமாளித்து, வளர்ச்சி இலக்கை அடைந்து வருகின்றன. குறிப்பாக இந்தியா, சீனா போன்றவை நல்ல வளர்ச்சி பெற்றுள்ளன.ஏழ்மையை ஒழிப்பதில் அபார முன்னேற்றம் கண்டுள்ளன. மேம்பட்ட பொருளாதார கொள்கைகள், விரைவான வளர்ச்சிகளால், 2015ம் ஆண்டிற்குள் இந்த நாடுகள் இன்னும் மேம்பட்ட வளர்ச்சியை பெறும்.உலகில் மிகவும் ஏழ்மையாக இருப்பவர்களை பாதியாகக் குறைக்க, தற்போதைய பொருளாதாரம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
உலகில் ஒரு நாளைக்கு 56 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் வசிப்பவர்களின் எண்ணிக்கை, 2015ல், 88 கோடியே 30 லட்சமாக இருக்கும். இதுவே, 2005ல், 140 கோடியாகவும், 1990ல், 180 கோடியாகவும் இருந்தது.வளர்ந்து வரும் நாடுகளில், கல்வியிலும் ஆண், பெண் பாரபட்சம் குறைந்து வருகிறது. பாதுகாப்பான குடிநீர் கிடைக்கிறது. வறுமையை முற்றிலும் ஒழிக்கும் நிலையை, பலநாடுகள் அடைந்துள்ளன. அதேநேரத்தில், இந்த நாடுகளில், 45 சதவீத அளவுக்கு சுகாதார பிரச்னை உள்ளன. பேறு கால இறப்பு வீதம், 39 சதவீதமாகவும், குழந்தைகள் இறப்பு விகிதம், 38 சதவீதமாகவும் உள்ளன.இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply