டெல்லி: பள்ளி மாணவர்களிடம் மூளை நோய்கள் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த ஏ.ஐ.ஐ.எம்.எஸ் -இன் நரம்பு அறுவை சிகிச்சை துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.
எபிலெப்சி, டியூமர், பார்கின்சன் உள்ளிட்ட மூளை தொடர்பான வியாதிகள் மற்றும் அவைகளின் அறிகுறிகள் பற்றி 20 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது. “மூளை விழிப்புணர்வு வாரத்தை” முன்னிட்டு, அதிகளவிலான மக்களிடையே மூளை தொடர்பான நோய்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திட ஏ.ஐ.ஐ.எம்.எஸ். முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து ஏ.ஐ.ஐ.எம்.எஸ். வட்டாரங்கள் கூறியதாவது, “பள்ளி மாணவர்களிடம் இதுதொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் சிறந்த வழி. இந்த நோய்கள் தொடர்பாக போதுமான விழிப்புணர்வு இல்லாததால், பலர் நோய் முற்றிய பிறகே மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள்.
மூளை நோய் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களில் 50% பேர் 18-45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்ற கொடுமையான உண்மை இன்று உள்ளது. மேலும் இந்த நோய் பாதித்திருப்பவர்களில் பெரும்பாலானோர், தங்களின் குடும்பத்திற்காக சம்பாதிக்கும் ஒரே நபராக உள்ளனர் என்பது இன்னும் சோகமான விஷயம்.
“மூளை விழிப்புணர்வு வாரம்” என்பது ஒரு சர்வதேச விழிப்புணர்வு செயல்பாடாகும். இதன்மூலம் மூளை ஆராய்ச்சியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை அறிந்துகொள்வதோடு, விழிப்புணர்வு சேவையிலும் இணைய முடியும்” என்று தெரிவித்தன.
Leave a Reply