இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் ஏற்றி வந்த வணங்காமண் கப்பலை இலங்கை அரசு அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
‘இலங்கையில் உணவு கிடைக்காமல் தவித்த தமிழர்களுக்கு உதவ ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அனுப்பிவைத்த உதவிப்பொருட்கள் கொண்ட ‘கேப்டன் அலி’ கப்பலை சிங்கள கடற்படை திருப்பி விட்டது. அந்த கப்பலில் 884 டன் உணவு, மருந்து மற்றும் உதவிப்பொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
உலகில் புலம் பெயர்ந்து தவிப்பவர்களுக்கு உதவ, மனிதாபிமான அடிப்படையில் தேவையான பொருட்களை சர்வதேச சமூகம் கொடுப்பது வழக்கமான ஒன்றுதான்.
எனவே கேப்டன் அலி கப்பலில் உள்ள உதவிப்பொருட்களை இலங்கையில் இறக்க அந்த நாட்டை இந்தியா சம்மதிக்க வைக்க வேண்டும். மேலும் செஞ்சிலுவை சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகள் கண்காணிப்பில் அந்த உதவிப்பொருட்களை ஈழத்தமிழர்களுக்கு கிடைக்க பரிந்துரை செய்ய வேண்டும்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, சரியான நடவடிக்கை எடுத்தால் நன்றி உடையவனாக இருப்பேன். வணங்கா மண் கப்பல் உதவிப்பொருட்கள் தொடர்பாக உங்களிடம் பேச, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை அனுப்பி வைக்கிறேன்’ என்று கூறப்பட்டுள்ளது.
Leave a Reply