பிரதமர் அலுவலகம் உரிய கவனத்துடன் செயல்பட்டிருந்தால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ராஜா செய்த தவறுகளையும், முறைகேடுகளையும் தவிர்த்து, நஷ்டம் ஏற்படாத வண்ணம் காப்பாற்றி இருக்க முடியும்’ என, பார்லிமென்டின் பொதுக்கணக்கு குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இத் தகவல் வெளியானதால், ஏற்கனவே இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர் இடம்பெற்று, அதனால் நெருக்கடியில் உள்ள தி.மு.க.,வுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த பொதுக்கணக்கு குழுவின் தலைவர் முரளிமனோகர் ஜோஷி, தனது விசாரணை அறிக்கையின் இறுதி நகலை, குழுவின் உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, அதில் உள்ள விவரங்கள் நேற்று டில்லியில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளன. இந்த அறிக்கை இன்னமும் இறுதி செய்யப்படாவிட்டாலும் இதில் உள்ள விவரங்கள் தி.மு.க.,வுக்கும், மத்தியில் ஆளும் அரசுக்கும் கெட்ட பெயரை அதிகரிக்கச் செய்யும்.மொத்தம் 270 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கை நகலின் ஒரு சில பக்கங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. இது ரகசியமாகக் கசிந்திருக்கிறது, இந்த நிலையில், அவற்றில் தொழிலதிபர் ரத்தன் டாடா குறித்து மிகவும் கடுமையான விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, தனக்கு சாதகமாக செயல்பட்ட ராஜாவை புகழ்ந்து, தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்தளவுக்கு அமைச்சரவை இலாகா ஒதுக்கீடுகளில் ஆர்வம் காட்டுகின்றன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதே போல, ஸ்பெக்ட்ரம் ஊழலில் பூஜ்யம் அளவு மட்டுமே நஷ்டம் ஏற்பட்டதாக கூறிய கபில் சிபலையும் விமர்சித்துள்ளது. அவரது பேச்சு பொறுப்பற்ற பேச்சு என்றும், நடைபெற்ற ஊழலை மூடிமறைக்கும் விதத்தில் அவர் நடந்து கொள்வதாகவும் கண்டித்துள்ளது.ஸ்பெக்ட்ரம் உரிமத்தை விற்கும் விஷயம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கும், தொலைத்தொடர்பு இலாகாவிற்கும் இடையில் நடைபெற்ற தகவல் பரிமாற்றங்களில் முக்கிய தவறுகள் நடைபெற்றுள்ளன. பிரதமர் அலுவலகம் நினைத்திருந்தால் இந்த முறைகேட்டை தவிர்த்து இருக்க முடியும். பிரதமர் அலுவலகம் உரிய விழிப்புடனும், கவனத்துடனும் செயல்பட்டிருந்தால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகளை தவிர்த்து, நஷ்டம் ஏற்படாத வண்ணம் காப்பாற்றியிருக்க முடியும்.முக்கிய தகவல்களை பிரதமர் அலுவலக அதிகாரிகள், பிரதமரிடம் தெரிவிக்காமல் தாமதப்படுத்தியுள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை எவ்வாறு மேற்கொள்ளப்போகிறேன் என்பது குறித்து பிரதமருக்கு ராஜா எழுதிய கடிதத்தை, பிரதமரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்ல, பிரதமர் அலுவலகம் தவறியுள்ளது. இதனால், நடைபெறும் சம்பவங்கள் அனைத்தையும் பிரதமர் வெறுமனே வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை இருந்துள்ளது.தவறை தடுத்து நிறுத்த தவறியதன் மூலம், ராஜாவின் தவறான நடவடிக்கைக்கு பிரதமரும் மறைமுகமாக துணை போய் இருப்பதாக கருத வேண்டியுள்ளது. அதே போல, இந்த விஷயம் முடிந்த ஒன்று என்று அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் குறிப்பிட்ட தகவலும் இடம் பெற்றிருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களில் நடைபெற்ற நிர்வாக தவறுகள் மற்றும் முறைகேடுகள் ஆகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஊழலுக்கு முக்கியக் காரணமாக ராஜா இருந்தார் என்றும், அதே போல கனிமொழியும் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று சி.பி.ஐ., ஆவணங்களை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்திருக்கிறது. ஆகவே, பொதுக்கணக்கு குழுவும் தன்பங்குக்கு இதன் தீவிரத்தை அதிகரித்திருக்கிறது.இந்த அறிக்கை ஒருதலைப்பட்சமாக தயாரிக்கப்பட்டுள்ளது, இதை ஏற்கப்போவதில்லை என்றும், இந்த அறிக்கை மீதான தங்களது எதிர்ப்பு கருத்துக்களையும் பதிவு செய்வதற்கு காங்கிரஸ் – தி.மு.க ., உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பொதுக்கணக்குக் குழுவின் 22 உறுப்பினர்களுக்கு, அதன் தலைவரும், பா.ஜ., மூத்த தலைவருமான முரளிமனோகர் ஜோஷி நேற்று முன்தினம் கடிதமும் எழுதியுள்ளார். அதில், வரும் 28ம் தேதி(இன்று) கூட்டம் நடைபெறும் என்றும், அதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. தவிர, அடுத்தநாள் (29ம் தேதி) பொதுக்கணக்கு குழு விசாரணை அறிக்கையை முறைப்படி சபாநாயகர் மீராகுமாரிடம் வழங்கவும், ஜோஷி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பொதுகணக்குக் குழுவின் அதிகாரம் குன்றிவிடக்கூடாது என்பதை சபாநாயகர் கூறியுள்ளதை, ஜோஷி சுட்டிக் காட்டியுள்ளார். அதேபோல, காங்கிரஸ் – தி.மு.க., கூறுவதுபோல பலரையும் சம்மனுக்கு அழைத்துக் கொண்டே இருந்தால், இந்த குழுவின் காலக்கெடுவுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க இயலாமல் போய்விடும் என்றும் கூறியுள்ளார். இச் சூழ்நிலையில் இந்த அறிக்கையின் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அறிக்கையை நிறுத்த கடும் முயற்சி : ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணை அறிக்கை தொடர்பாக, காங்கிரஸ் மற்றும் பா.ஜ., ஆகிய இரண்டு தரப்புக்கும் மோதல் வலுத்துள்ளது. இந்த அறிக்கையை எப்படியும் நிறுத்தி வைக்க வேண்டுமென்று காங்கிரஸ் தரப்பு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதால், இன்று நடைபெறவுள்ள பொதுக்கணக்கு குழுவில் விசாரணை அறிக்கைக்கு ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விசாரணை குறித்து இறுதி அறிக்கையின் நகல் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் சில பக்கங்கள் மட்டும் டில்லியில் நேற்று மீடியாக்களிடம் கசியவிடப்பட்டன.திட்டமிட்டபடி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்பதில் பொதுக்கணக்கு குழு தலைவர் முரளிமனோகர் ஜோஷி உறுதியுடன் இருந்து வந்தார். ஆனால், அதை எப்படியும் முறியடித்தாக வேண்டுமென்று காங்கிரஸ், தி.மு.க., தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும்கூட, கடைசியில் அறிக்கையின் நகல்கள், “லீக்’ ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனாலும், இந்த அறிக் கைக்கு பொதுக்கணக்கு குழுவில் ஒப்புதல் கிடைக்க பெரும்பான்மை கிடைக்கவிடாமல் செய்துவிடுவதன் மூலம் முறியடிக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.
பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழுவின் மொத்த உறுப்பினர்கள் 22 பேர். ஆனாலும், ஒரு இடம் காலியாக இருப்பதால் மொத்தம் 21 இடங்கள் உள்ளது. இதில், லோக்சபாவில் இருந்து 15 பேரும், ராஜ்யசபாவில் இருந்து 6 பேரும் உள்ளனர்.இதில் கட்சிகளின் பெரும்பான்மை பலத்தை வைத்துப் பார்க்கும்போது காங்கிரஸ் மற்றும் தி.மு.க., ஆகிய இரண்டும் சேர்த்து மொத்தம் 10 உறுப்பினர்கள் உள்ளனர். பா.ஜ., மற்றும் ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்த்து குரல் கொடுக்கும் அ.தி.மு.க., – இடதுசாரிகள் என அனைத்தும் சேர்த்து 9 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், குழுத் தலைவர் முரளிமனோகர் ஜோஷியும் அடக்கம். ஆக மொத்தம் 19. இது தவிர, பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சி சார்பிலான உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். ஆக இன்றைய கூட்டத்தில் தங்களுக்கு அதிக எண்ணிக்கை பலம் இருந்தால், தற்போது முரளிமனோகர் ஜோஷி தயாரித்து வைத்திருக்கும் அறிக்கையை நிறுத்தி வைத்து விட முடியும் என்று காங்கிரசும், தி.மு.க.,வும் கருதுகின்றன.ஆகவே, பகுஜன்சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களின் ஆதரவை எப்படியாவது இவ்விஷயத்தில் பெறுவதற்காக நேற்று பலவழிகளிலும் காங்கிரஸ் தரப்பில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.எனவே, இன்று நடைபெறவுள்ள பொதுக்கணக்கு குழு கூட்டத்தில் உஷ்ணமான விவாதம் இருக்கும். அதன் முடிவு எப்படியிருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
Leave a Reply