டெல்லி: ஏர் இந்தியா விமானிகள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளதால், அவதிப்படும் பயணிகளை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை இயக்குகிறது ரயில்வே அமைச்சகம்.
சென்னை – பெங்களூர் மார்க்கம் உள்பட பல வழி்த் தடங்களில் கூடுதல் ரயில்களை இயக்குகிறது.
ஏர் இந்தியா – இந்தியன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு இடையிலான சம்பள வித்தியாசத்தை நீக்கக் கோரி விமானிகள் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர். முதலில் 800 விமானிகள் இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.
5 நாட்களுக்கு முன்பதிவை ரத்து செய்த ஏர் இந்தியா
போராட்டத்தின் இரண்டாம் நாளான நேற்று மேலும் பல விமானிகள் போராட்டத்தில் இறங்கியதால் விமான சேவை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு முன்பதிவையும் ரத்து செய்துள்ளது ஏர் இந்தியா நிர்வாகம்.
இதுதான் சான்ஸ் என்று தாறுமாறாக கட்டணத்தை உயர்த்தியுள்ளன மற்ற தனியார் விமான நிறுவனங்கள். வேறு வழியில்லாததால் இந்த பகல் கொள்ளையை சகித்துக் கொண்டு பயணிக்கின்றனர் மக்கள்.
இந்த நிலையில் இவர்களுக்கு கைகொடுக்க முன்வந்துள்ளது ரயில்வே அமைச்சகம். முக்கிய தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
டெல்லி-மும்பை, டெல்லி-கொல்கத்தா, டெல்லி-ஹைதராபாத், மும்பை-ஹைதராபாத், மும்பை-பிகானீர், சென்னை-பெங்களூர் ஆகிய முக்கிய வழித் தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்கள் ராஜதானி அதிவேக எக்ஸ்பிரஸ் போல இருக்கும். முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டது. இதில் முதல் வகுப்பு ஏசி, 2-ம் வகுப்பு ஏசி, 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகள் இருக்கும்.
காத்திருப்போர் பட்டியலை கருத்தில் கொண்டு கூடுதல் பெட்டிகளை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பயணிகள் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து ரயில்வே மண்டலங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மண்டல ரயில்வே அலுவலகங்களில் இந்த சிறப்பு ரயில்களின் கால அட்டவணை குறித்த தகவல்களை பெறலாம்.
இந்த சிறப்பு ரயில்களின் இயக்கம் குறித்த தகவல்களை தங்களது பயணிகளுக்குத் தெரிவிக்குமாறு ஏர் இந்தியா நிறுவனமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில், சென்னையில் இருந்து பெங்களூருக்கு வரும் 29, 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் காலை 8.45 மணிக்கு சிறப்பு ரயில்கள் புறப்பட்டுச் செல்லும். அதுபோல மறுமார்க்கத்தில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு அதே தினங்களில் மாலை 4.10 மணிக்கு சிறப்பு ரயில்கள் புறப்படும் என ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முன்பதிவு:
இந்த ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 29) தொடங்குகிறது.
Leave a Reply