தேர்தலின் போது அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்: மத்திய மந்திரி மு.க.அழகிரி மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது; மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு

posted in: அரசியல் | 0

தேர்தலின் போது அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக மு.க.அழகிரி மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மத்திய மந்திரி மு.க.அழகிரி கட்சி நிர்வாகிகளுடன் கடந்த 1-ந் தேதி மேலூர் அம்பலக்காரன்பட்டியில் உள்ள வல்லடிக்காரர் கோவிலுக்கு வந்தார். அப்போது தாசில்தார் காளிமுத்துவுடன் வந்த தேர்தல் வீடியோகிராபர் கண்ணன் படம் எடுக்க முயன்றார்.

இதை பார்த்ததும் படம் எடுக்கக்கூடாது என்று கூறி தி.மு.க.வினர் வீடியோகிராபரிடம் இருந்து கேமராவை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் மு.க.அழகிரி, துணை மேயர் பி.எம்.மன்னன், மேலூர் ஒன்றிய செயலாளர் ரகுபதி, ஒத்தப்பட்டி திருஞானம் ஆகியோர் மீது கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தங்கள் மீதான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.அழகிரி உள்பட 4 பேரும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

அதே வேளையில் தாசில்தார் காளிமுத்துவும் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், `நான் போலீசாரிடம் அளித்த புகாரில் கூறப்பட்டு உள்ளது போன்று சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. எனவே அந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஒத்தப்பட்டி அ.தி.மு.க கிளை செயலாளர் கண்ணன், “மு.க.அழகிரி உள்பட 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது” என்று மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் ஆர்.எஸ்.ராமநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. போலீசார் தரப்பில் மாநில அரசு வக்கீல் குமரேசன், மு.க.அழகிரி தரப்பில் வெங்கடசேஷன், கண்ணன் தரப்பில் மூத்த வக்கீல் செல்லப்பாண்டியன், தாசில்தார் காளிமுத்து தரப்பில் ஹேமாகார்த்திகேயன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

வக்கீல் வெங்கடசேஷன்:-

மு.க.அழகிரி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று கண்ணன் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் கண்ணனுக்கும், இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மூத்த வக்கீல் செல்லப்பாண்டியன்:-

இந்த வழக்கில் கண்ணனை ஒரு சாட்சியாக போலீசார் சேர்த்துள்ளனர். அவரிடம் விசாரணையும் நடத்தி உள்ளனர்.

நீதிபதி:-

கண்ணன் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மூத்த வக்கீல் செல்லப்பாண்டியன்:-

எப்.ஐ.ஆரில் தாசில்தாரை அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாக தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதன்பின்பு தாசில்தார், விசாரணை அதிகாரியிடம் (போலீஸ் இன்ஸ்பெக்டரிடம்) புகார் குறித்து மறுப்பு தெரிவித்து எந்த மனுவும் அளிக்கவில்லை. மாறாக பத்திரிகைகளில் மட்டுமே அவர் மறுப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன. நடந்த சம்பவம் முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை பார்த்தாலே அனைத்து உண்மைகளும் தெரிந்து விடும். ஒரு எப்.ஐ.ஆர் புலன் விசாரணையில் இருக்கும் போது, அதை ரத்து செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு தீர்ப்புகளை கூறி உள்ளது. எனவே மு.க.அழகிரி உள்பட 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது.

மாநில அரசு வக்கீல் குமரேசன்:-

தாசில்தார் காளிமுத்து முதலில் கொடுத்த புகாரை மறுத்து தேர்தல் ஆணையத்துக்கு அளித்த புகாரின் அடிப்படையில் மு.க.அழகிரி மீதான நடவடிக்கையை நிறுத்தி வைக்கும்படி தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. எனவே மு.க.அழகிரி மீதான வழக்கை தனியாக பிரித்து அவர் மீதான நடவடிக்கையை கைவிடலாம் என்று முடிவு செய்துள்ளோம். மற்றவர்கள் மீது விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.

நீதிபதி:-

போலீசார் தான் விசாரணை நடத்தி ஒருவர் மீதான நடவடிக்கையை கைவிடுவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

தேர்தல் ஆணையம் அதுபோன்று சொல்லி இருக்கும்பட்சத்தில் போலீசார் விசாரித்து முடிவு எடுத்துக்கொள்வார்களே? வக்கீல் ஹேமாகார்த்திகேயன்:-

தாசில்தாரின் அபிடவிட் அடிப்படையில் வழக்கை முடிவுக்கு கொண்டு வரலாம்.

நீதிபதி:- தாசில்தார் போலீசாரிடம் தனது வாக்குமூலத்தை அளிக்கலாம். கோர்ட்டில் அளித்து இருக்கும் வாக்குமூலத்தை ஏற்க முடியாது.

வக்கீல் வெங்கடசேஷன்:-

மு.க.அழகிரி தவிர மற்றவர்கள் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். மு.க.அழகிரி, அரசு பணியில் ஈடுபட்ட அதிகாரியை தடுக்கவில்லை. அதை தாசில்தார் காளிமுத்து தனது மனுவில் கூறி உள்ளார். அதே போன்று சட்டவிரோதமாகவும் கூடவில்லை. எனவே மு.க.அழகிரி மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

தாசில்தார் காளிமுத்துவின் மனுவை தற்போதைய சூழ்நிலையில் ஏற்க முடியாது. எப்.ஐ.ஆரை பார்க்கும் போது சம்பவம் நடந்து இருப்பதற்கான முகாந்திரம் உள்ளது. எனவே மு.க.அழகிரி மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மற்றவர்கள் தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டதால் அந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *