அடுத்தடுத்து முதல்வருடன் காங்., தலைவர்கள் சந்திப்பு: ஸ்பெக்ட்ரம் விவகார கசப்பை மாற்ற முயற்சி?

posted in: அரசியல் | 0

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி., பெயர் இடம் பெற்றதை தொடர்ந்து, காங்கிரஸ் – தி.மு.க., இடையே கசப்புணர்வு வளராமல் இருக்க, முதல்வர் கருணாநிதியை, காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி.,யின் பெயர் இடம் பெற்றது. அதை சி.பி.ஐ., கையாண்டவிதமும் முதல்வர் கருணாநிதியை எரிச்சல் படவைத்தது. இதையடுத்து, தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம், அறிவாலயத்தில் நடந்தது. அக்கூட்டத்தில், ஸ்பெக்ட்ரம் வழக்கை சட்டரீதியாக மேற்கொள்வது என்ற முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அக்கூட்டத்தில் காங்கிரஸ் மேலிடம் மீது தி.மு.க., இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், தனியார் “டிவி’ நிறுவனம் ஒன்று வெளியிட்ட கருத்துக் கணிப்பில், “தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்கும்’ என அறிவித்தது. அந்த நிலையில், நேற்று முன்தினம் முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில், அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் சந்தித்துப் பேசினார்.

வெளியே வந்த ஜெயந்தி, நிருபர்களிடம் கூறும்போது, “”காங்கிரஸ் – தி.மு.க., கூட்டணியில் எந்த விரிசலும் கிடையாது. ஸ்பெக்ட்ரம் பிரச்னை சுப்ரீம் கோர்ட்டில் துவங்கி, பல்வேறு அமைப்புகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால், சட்டவழி செல்லவேண்டிய நிலை இருக்கிறது. அதனால், கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை’ என்றார்.

அவரை தொடர்ந்து, மத்திய அமைச்சர் வாசன், முதல்வர் கருணாநிதியை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, “ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வெற்றி மிகவும் பிரகாசமாக உள்ளது. அதிக இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம்’ என, கூறினார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் குழப்பத்தை உருவாக்க அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நினைக்கிறார் என்ற குற்றச்சாட்டையும் முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி – பதில் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய கூட்டணியில் இருந்து தி.மு.க.,வை வெளியேற்ற சதி நடப்பதாகவும் தெரிவித்தார்.

இதன் பின்னணியில் தான், மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க., நீடிக்கிறது என்றும், எந்த பிரச்னையும் இல்லை என்றும் உறுதிப்படுத்தவும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஏற்பட்ட கசப்புணர்வை போக்கவும் காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து முதல்வரை சந்தித்துப் பேசி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் முதல்வரை சந்தித்து தன் முழு ஆதரவையும் தந்திருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் மட்டும் முதல்வரை இன்னும் சந்திக்கவில்லை. அவரும் விரைவில் சந்திப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.காங்கிரஸ் மேலிடத்தின் விருப்பப்படியே, தமிழக தலைவர்கள், முதல்வர் கருணாநிதியை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வர இன்னமும் 11 நாட்களே உள்ள நிலையில், கடந்த சில நாட்களில் நடக்கும் இச்சந்திப்புகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. மேலும் காங்., செய்தி தொடர்பாளர்களும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை தங்கள் பேட்டியில் நாசூக்காக கையாள்வதுடன், பொதுக்கணக்குக்குழு கூட்டத்திலும் அமளி ஏற்படுத்தி, ஒருமித்தகருத்து கொண்ட அறிக்கை வெளிவராமல் சாமர்த்தியமாக காய்நகர்த்தினர். இப்பின்னணியில் காங்கிரஸ் தலைவர்களின் படையெடுப்பு, தி.மு.க., -காங்கிரஸ் உறவில் கசப்பு குறைய மேற்கொள்ளும் முயற்சியாகும் என்று கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *