புதுடில்லி : பூச்சிக் கொல்லி மருந்தான, என்டோசல்பானுக்கு தடை விதிக்கக்கோரிய மனு மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடக்கிறது.
கேரளாவின் காசர்கோடு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில், முந்திரி தோட்டங்களில் பூச்சிகளை ஒழிக்க, என்டோசல்பான் மருந்து பயன்படுத்தப்பட்டதால், பலர் பாதிக்கப்பட்டனர். எனவே, கேரள அரசு, இந்த மருந்தை தடை செய்துள்ளது.
எனினும், நாடு தழுவிய அளவில் இந்த பூச்சிக் கொல்லி மருந்து தடை செய்யப்பட வேண்டும் என, கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சியினர், கடந்த வாரம், முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இக்கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள், பிரதமரை சந்தித்து, என்டோசல்பானுக்கு தடை விதிக்க வற்புறுத்தினர். இதற்கிடையே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
என்டோசல்பானால், கேரளாவில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இந்த மருந்துக்கு, 81 நாடுகள் தடை விதித்துள்ளன. என்டோகிரைன் சுரப்பியின் செயல்பாட்டை பாதிக்க செய்யும் மற்றும் இளைஞர்கள், வாலிப பருவத்தை அடைவதை தாமதப்படுத்தும் இந்த மருந்துக்கு தடை விதிக்கும் படி மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான பெஞ்ச், இந்த மனு மீதான விசாரணையை இன்று நடத்த உள்ளது. இந்த ரசாயன நச்சு, இந்தியாவில் ஆண்டுதோறும், நான்கு கோடி லிட்டர் தயாரிக்கப்படுகிறது என்றும், அதன் உற்பத்தி மதிப்பு, 30 கோடி டாலர் (ரூ.1,500 கோடி ) என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. காபி தேயிலை, தக்காளி, கத்தரி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவை உட்பட, பல பயிர்களுக்கு தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தில் இந்த நச்சு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply