புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் புதுக்கோட்டையில் ஆலோசனை நடத்தினார்.
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இந்த ஆலோசனை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகள் அறிவிப்பது, மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள், வெற்றி பெற்றவருக்கு சான்றிதழ் அளிப்பது உள்பட பல்வேறு அம்சங்கள் பற்றி இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
அதன்பிறகு ஓட்டுபதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மேற் கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் பிரவீண்குமார் ஆய்வு செய்தார். இதன்பிறகு பிரவீண்குமார் தஞ்சாவூர் சென்றார். தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் கலைக்கல்லூரியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் கல்லூரியின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள அறைகளில் வைத்து பூட்டி வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குகள் எண்ணுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை பிரவீண்குமார் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்கு எண்ணும் மையத்திற்குள் தேர்தல் ஆணைய பார்வையாளர் தவிர வேறுயாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது. நிருபர்கள் மட்டும், அவர்களுக்கு ஒதுக்கப்படும், ஊடக மையத்தில் செல்போன்களை பயன் படுத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கும் என நினைக்கிறேன். ஒரு சுற்றுவாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர்தான் அடுத்த சுற்று வாக்கு எண்ணும் பணி தொடங்கும்.
தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 11 ஆயிரம் தபால் ஓட்டு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஒரு வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அறிய முடியாத வகையில் வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது. ஆனால், இந்த முறை வழக்கமான முறைப்படி வாக்குச்சாவடி வாரியாகவே வாக்குகள் எண்ணப்படும்.
ஒவ்வொரு தொகுதி வாக்குகளை எண்ணவும், இடவசதிக்கு ஏற்ப, 8 முதல் 14 மேஜைகள் போடப்படும். ஒவ்வொரு மேஜையிலும் 2 மாநில அரசு அலுவலர்கள், மத்திய அரசைச் சேர்ந்த ஒரு நுண் பார்வையாளர் என மொத்தம் 3 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள். அனைத்து மேசைகளிலும் ஒரு சுற்று எண்ணப்பட்டு முடிந்து, அதன் விவரம் அறிவிக்கப்பட்ட பிறகே அடுத்த சுற்று எண்ணிக்கை தொடங்கும்.
முன்னணி நிலவரம் உடனுக்குடன் அறிவிக்கப்படும். தேர்தல் தொடர்பான வழக்குகளில் வருகிற 12-ந் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இது குறித்து காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் 70 சதவீத வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply