தமிழக மக்களிடையே உடல் உறுப்பு தான விழிப்புணர்ச்சிக்கு காரணமான ஹிதேந்திரனின் பிறந்த நாள் தமிழக மக்களால் நாளை கொண்டாடப்படவுள்ளது.
அன்று பள்ளிக்கூடம் இருந்தது. மாலையில் பள்ளி விட்டதும் வேக வேகமாக வீட்டுக்கு வந்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இன்ப அதிர்ச்சி. பெங்களூரில் இருந்து மாமா வந்திருந்தார். அம்மாவின் தம்பி. இவனது முதல் பிறந்த நாளன்று பாட்டு பாடி குடும்பத்தோடு கொண்டாடியவர் 14 ஆண்டுகளுக்கு பிறகு அன்றுதான் வந்திருக்கிறார்.
சென்னையில் இருந்து வாங்கி வந்திருந்த கேக்கை எடுத்து மெழுகுவத்தி ஏற்றி அவனை ஊதி அணைக்கச் சொல்லி பாட்டு பாடினார் மாமா. புது டிரஸ்ஸெல்லாம் போடவில்லை. இருந்தாலும் குதூகலம் தொற்றிக் கொண்டது அவனுக்கு. மாமாவை கிண்டலடித்தான். அம்மாவை கட்டிப் பிடித்து தூக்கி பயமுறுத்தினான். மெல்லிய புன்னகையுடன் பாட்டி அருகில் நின்று ரசித்துக் கொண்டிருந்த அப்பாவை கலாய்த்தான். அவனது தம்பி இந்த கொண்டாட்டத்தை வீடியோவில் பதிவு செய்துகொண்டிருந்தான்.
நாளை அந்த வீடியோவை ஓடவிட்டு பார்க்க வீட்டில் உள்ளவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். நாளை அவனுக்கு 16வது பிறந்த நாள். சோகத்தை சுமந்தபடி வீடியோவில் ஹிதேந்திரனை பார்த்து வாழ்த்து சொல்ல காத்திருக்கிறார்கள்.
அம்மா புஷ்பாஞ்சலி இந்த தகவலை இயல்பாக தெரிவித்தார். உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கவில்லை. அப்பா அசோகனும் அப்படியே. இருவரும் டாக்டர்களாக இருப்பது மட்டுமல்ல காரணம். 15 வயதில் மகனை இழந்த துக்கத்தை மக்களிடம் மகத்தான விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்படுத்திக் கொண்ட திருப்தி முக்கிய காரணம். மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்து மூளை இறப்பு ஏற்பட்டதும், இயங்கிக் கொண்டிருந்த அவனது உடல் உறுப்புகளை தானம் செய்து 6 உயிர்கள் பிழைக்க உதவியவர்கள் ஆயிற்றே. இறந்தும் எண்ணற்ற இதயங்களில் வாழும் மகனை பெற்ற பெருமை எத்தனை பெற்றோருக்கு கிடைத்திருக்கிறது.
தமிழகமே கண்ணீர் பெருக்குடன் அந்த பெற்றோரை பாராட்டி வணங்கியது. அவர்கள் காட்டிய வழியில் செல்ல அடுத்தடுத்து மக்கள் முன்வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஹிதேந்திரன் மரணத்தை தொடர்ந்து, கடந்த எட்டு மாதங்களில் மட்டும் தமிழ்நாட்டில் மூளை இறப்பு நேரிட்டவர்களின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 60 பேருக்கு பொருத்தப்பட்டிருக்கிறது. இது சர்வதேச சராசரிக்கு இணையான சாதனையாகும்.
உறுப்பு தானம், உடல் தானம் தவிர தலைக்கவசம் அணிவது பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் அ.பு.ஹிதேந்திரன் நினைவு அறக்கட்டளை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தகவல் பெற விரும்புவோர் 044-27447293 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Leave a Reply