அறுவை சிகிச்சைக்கு பிறகு, வலி தெரியாமல் இருக்க பயன்படுத்தப்படும் ஒரு வகை “இன்ஜெக்ஷன்’ மருந்து, போதைக்காக பயன்படுத்துவது கரூரில் அதிகரித்துள்ளது. மருந்தக ஆய்வாளர், சுகாதாரத்துறைக்கு இத்தகவல் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.
ஒருவகை இன்ஜெக்ஷன்(ஊசி) மருந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிக்கு, கடுமையான வலியை குறைக்க டாக்டர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த மருந்து உடலில் செலுத்தப்பட்டதும் வலி தெரியாமல் மரத்துபோகச் செய்யும் இயல்புடையது. இவை, டாக்டரின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது என்பது விதி. ஆனால், கரூரில் உள்ள சில மருந்துக் கடைகளில் இந்த வலி நீக்கி மருந்து கனஜோராக விற்பனையாகிறது. அறுவை சிகிச்சை வலி இல்லாதவர்கள், ஊசி மூலம் இடுப்பின் பின்பக்கம், தொடையில் செலுத்திக்கொள்வதன் மூலம் சில மணி நேரத்துக்கு போதை ஏற்படுவதால், மருந்தின் உண்மையான பயன்பாடு மாறிப்போய், போதை மருந்தாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பிட்ட மருந்துக் கடைகளில், ஊசி மூலம் மருந்து செலுத்தவும் உதவி செய்வதாக புகார் எழுந்துள்ளது. இத்தகைய மருந்துக் கடைகளின் அருகில், பயன்படுத்தப்பட்ட இன்ஜெக்ஷன் மருந்து பாட்டில்கள் ஏராளமாக கிடக்கின்றன. தினமும் பத்து முறை வரை ஏற்றிக்கொள்ளும் போதை அடிமைகள் கரூரில் அதிகரித்து வருவதாக டாக்டர்கள் கூறினர். போதைக்காக குறிப்பிட்ட மருந்தை ஊசி மூலம் செலுத்திக்கொள்வோர் இடுப்பு மற்றும் தொடை பகுதியில் சிகரெட் சூடு போட்டது போன்ற வடுவை காணமுடியும். போதை மருந்து பயன்பாடு குறித்து உளவியல் துறை சிறப்பு டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது: இந்த வகை மருந்து பயன்படுத்துவோர், காலப்போக்கில் ஒரே ஊசியை பலர் பயன்படுத்தும் அளவுக்கு மாறி விடுகின்றனர். இந்த நடைமுறை எச்.ஐ.வி., தொற்றுக்கு வழியேற்படுத்தும். இடுப்புக்கு கீழ் ஏகப்பட்ட கடுமையான தழும்பு உருவாகும்.
மேலும், மலட்டுத்தன்மை ஏற்படுத்துவதுடன், போதைக்கு அடிமையாகி மூளை குழம்பி மனநோயாளியாகும் வரை பிரச்னை ஏற்படும். ஒரு கட்டத்தில், எந்தனை ஊசி போட்டாலும் போதை தெரியாத நிலைக்கு சம்பந்தப்பட்ட நபர் தள்ளப்படுவார். இவ்வாறு செந்தில்குமார் கூறினார். கரூரில் தற்போது பரவிவரும் இத்தகைய நடைமுறை குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களிடம் தகவல் அளித்த போது, “திருச்சியில் உள்ள மருந்துகள் ஆய்வாளர் அலுவலகத்துக்கு தகவல் அளித்து நடவடிக்கை எடுப்பதாக’ கூறினர். ஆனால், திருச்சி அலுவலகத்தில் இருந்து வரும் சில அலுவலர்கள், கரூரில் உள்ள மருந்துக் கடைகளில் “மாமூல்’ பார்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.
மருந்து கட்டுப்பாடுத் துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் கூறியதாவது: “சிந்தடிக்’ முறையில் தயாரிக்கப்படும் இந்த மருந்து தற்போது வருவது குறைந்துள்ளது. டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் சம்பந்தப்பட்ட மருந்தை விற்பது குற்றம். நகர் பகுதியில் உள்ள பார்மசிகளில் தான் அடிக்கடி குற்றம் நடக்கிறது. சமீபத்தில் கூட கரூரில் ஆய்வு நடத்தினேன். விரைவில் இது குறித்து கரூரில் மீண்டும் ஆய்வு நடத்துவேன். இவ்வாறு ஜெயராஜ் கூறினார்.
Leave a Reply