ஜெயலலிதா புத்திசாலி : “அரசர்’ தருகிறார் சான்றிதழ்

posted in: அரசியல் | 0

சு.திருநாவுக்கரசர் முன்னாள் மத்திய அமைச்சர் : எம்.ஜி.ஆரின் போர்ப்படைத் தளபதிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர்;


அ.தி.மு.க., உடைந்த போது, ஜெயலலிதாவிற்கு ஆதரவாக இருந்து, கட்சியை அவர் பக்கம் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியவர்; ஜெயலலிதாவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனிக்கட்சி துவங்கி நடத்தியவர்; பா.ஜ.,வில் இணைந்து மத்திய அமைச்சர் பதவி பெற்றவர்; தற்போது காங்கிரசில் ஐக்கியமாகி, சட்டசபை தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் களம் கண்டவர் சு.திருநாவுக்கரசர். தொகுதி வெற்றி வாய்ப்பு, காங்கிரஸ் கோஷ்டி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு, திருநாவுக்கரசர் அளித்த, “சுளீர்’ பதில்கள்:

அறந்தாங்கி தொகுதியில், சீட் கிடைக்காத, தி.மு.க., எம்.எல்.ஏ., உள்ளடி வேலைகளில் ஈடுபட்டுள்ளதால், உங்களின் வெற்றி வாய்ப்பு பாதிக்குமா?

நிச்சயம் என் வெற்றி வாய்ப்பை பாதிக்காது. எம்.எல்.ஏ., உதய சண்முகத்திற்கு வேண்டிய, தி.மு.க., ஒன்றியத் தலைவரின் தம்பி தான், அ.தி.மு.க., வேட்பாளர். எனக்கு எதிராக பணியாற்றினார் என அறிந்ததும், தி.மு.க., தலைமை அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. அவருக்கென்று அங்கு பெரிய செல்வாக்கு ஒன்றும் இல்லை. தி.மு.க., தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்றினர். எனக்கென்று தொகுதியில் தனி செல்வாக்கு உள்ளது. நான், 15 ஆயிரம் முதல், 25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்; இதை யாராலும் தடுக்க முடியாது.

பா.ஜ.,வில் செல்வாக்காக இருந்த உங்களுக்கு, காங்கிரசில் உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதா?

தேசிய ஜனநாயக கூட்டணியில், எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க., (இவர் ஆரம்பித்த கட்சி) பிற கட்சிகளைப் போன்று அங்கம் வகிக்கும் ஒரு கட்சியாக இருந்தது. பிரதமர் வாஜ்பாய் காட்டிய அன்பால், பா.ஜ.,வில் இணைந்தேன். குறுகிய காலத்தில் இணை அமைச்சர், ராஜ்சபா எம்.பி., தேசிய செயலர் பதவிகள் கிடைத்தன. அடிகளார் சொன்னது போல், “கடை விரித்தேன்; கொள்வாரில்லை’ என்ற ரீதியில் தான், தமிழகத்தில் பா.ஜ., நிலை இருந்தது.

சிறுபான்மையினர், ஆதிதிராவிடர்கள் எல்லாம் தமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் என்று பா.ஜ.,வினர் நினைத்தனர். அ.தி.மு.க., – தி.மு.க., கூட, பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்கத் தயங்கின. வாஜ்பாயும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கும் நிலையில் இருந்தார். நான் பா.ஜ.,வில் இருப்பதால், என் ஆதரவாளர்கள் உள்ளாட்சிகளில் பணியாற்ற முடியாத நிலை இருந்தது.

எனவே, காங்கிரசில் இணைந்தேன். பதவிகளை எதிர்பார்த்து நான் காங்கிரசில் சேரவில்லை. தற்போது காங்கிரஸ் தலைமை அறிவித்த, 63 வேட்பாளர்களில், முன்னாள் அமைச்சர் நான் ஒருவர் தான். இதுவே எனக்கு பெரிய அங்கீகாரம். தங்கபாலு, அவரது மனைவி நிற்க முடியாததால் தான், வேட்பாளரானார். தொகுதியிலும், வெளியிலும் நான் செய்யும் பணியால் மக்களிடமும், சோனியா, ராகுலிடமும் நம்பிக்கையைப் பெற்று உயர்வேன்.

காங்., கட்சியில் மாநில தலைவர் தங்கபாலுவுக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளதே…?

இதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. கட்சி தலைமை தான் தங்கபாலுவை தலைவராக நியமித்துள்ளது. அவர் பதவியில் இருக்கும் கடைசி நிமிடம் வரை, அவரை விமர்சிக்க மாட்டேன். நிறைகுறைகளை அகில இந்திய தலைமையிடம் தான் சொல்ல வேண்டும்.

வேட்பாளர் தேர்வில், காங்., கட்சியில் பணம் விளையாடியதாக கூறப்படுகிறதே…

வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடியதாக குற்றம்சாட்டுவது சரியல்ல. அப்படி ஏதும் நடந்திருக்கும் என்று நினைக்கவில்லை.

காங்கிரஸ் என்றாலே பல கோஷ்டிகள்; கோஷ்டிக்கொரு தலைவர் இருக்கின்றனர். இதில் நீங்கள் எந்த கோஷ்டி?

தி.மு.க., – அ.தி.மு.க.,விலும், சில பேருக்கு கட்சி மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் இருக்கும் பழக்கம், தொடர்புகள், அவர்களிடமிருந்து பெற்ற உதவிகள், உதவி பெறாவிட்டாலும், மானசீகமாக அவர்களை பிடித்து, அவர்கள் பின்னால் செல்வது வழக்கமானது தான். வற்றாத ஜீவநதியான காங்கிரசில், கோஷ்டிகளைப் பார்க்கக் கூடாது. யார் கட்சியை நடத்துவது என்று தான் பார்க்க வேண்டும்.

நான் மூப்பனாருடன், 35 ஆண்டுகள் பழகியவன். அவரது மகன், மத்திய அமைச்சர் வாசனுடனும் நெருக்கம் உண்டு. அதுபோல், மத்திய அமைச்சர் சிதம்பரம், தங்கபாலு, இளங்கோவனுடனும் நல்ல தொடர்பில் இருக்கிறேன். நான் எல்லாருக்கும் பொதுவானவனாக இருக்கவே விரும்புகிறேன்.

தி.மு.க., – காங்., கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, ஏற்பட்ட மோதல்கள் கூட்டணியின் வெற்றியை பாதிக்குமா?

கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, சீட்கள் ஒதுக்கீட்டில் சிக்கல் வருவது இயற்கை தான். கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடியும் முன்பே, 160 இடங்களுக்கு வேட்பாளர் பட்டியலை, அ.தி.மு.க., வெளியிட்டது. தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒரே தொகுதியை கேட்டதால் சில சங்கடங்கள் ஏற்பட்டன.

ஆனால், தி.மு.க., தலைவர் கருணாநிதி, அதை தனக்குரிய சாதுர்யத்தால், ஜெயலலிதா போல் அவசரப்படாமல், கூட்டணி கட்சிகளுக்கு எல்லாம் சீட்களை ஒதுக்கிவிட்டுத் தான், தி.மு.க., பட்டியலை வெளியிட்டார். பிரச்னைகளோடு ஆரம்பித்து, பின் உடன்பாடு சுமுகமாக முடிந்தது. சங்கடங்கள் எல்லாம் மறைந்து போனது. இதனால், வெற்றி வாய்ப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகள் எப்படியிருந்தது, அதுபற்றி விமர்சனம் வருகிறதே…?

தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதே. பல கோடி ரூபாய் வைத்துள்ளோர் தேர்தலில் நிற்க முடியும்; ஏழை, எளியோர்கள் நிற்க முடியாது என்ற எண்ணத்தை தேர்தல் கமிஷன் மாற்றியுள்ளது. இந்தியா முழுவதும் ஜனநாயகம், பண நாயகம் என்ற அளவிலேயே உள்ளது. தேர்தலில் பணத்தை கொட்டி ஜெயிப்போர், ஆட்சிக்கு வந்ததும், செலவு செய்த பணத்தை சம்பாதிக்க வேண்டும், பணம் சேர்க்க வேண்டும் என்று எண்ணுவது தான், ஊழலுக்கு வழிவகுக்கிறது. தேர்தல் தான் ஊழலின் அஸ்திவாரம். அந்த நிலையை முற்றிலும் தடுக்க வேண்டும்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பது தவிர, ஆரத்திக்கு, 500 முதல், 1,000 ரூபாய் கொடுத்தல் என பணப் பட்டுவாடா தடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும், ஒரே மாதிரி விதிமுறைகளை அமல்படுத்த, பார்லிமென்டில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.

தி.மு.க., ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ளது. ராஜாவைத் தொடர்ந்து, கனிமொழியும் கைதாகும் நிலை உள்ளதே…?

தேர்தல் முடிந்து விட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், சட்டப்படியான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இந்த விவகாரத்தை, தி.மு.க., சட்டப்படி எதிர்கொள்ளும் என்றே கருதுகிறேன்.

தமிழகத்தில், அ.தி.மு.க., தான் ஆட்சி அமைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள்… மக்களின் பரவலான பேச்சும் அப்படியே உள்ளதே…?

அ.தி.மு.க., கண்டிப்பாக ஆட்சிக்கு வராது. எனக்குத் தெரிந்தவரை, தி.மு.க., தான் ஆட்சி அமைக்கும்; கூட்டணி ஆட்சியாக அமையும். மக்கள் மனதில் உள்ள ரகசியங்களை கருத்து கணிப்புகளால் தெரிந்து கொள்ள முடியாது.

நீங்கள் ஜெயலலிதா, கருணாநிதி இருவருடனும் நெருங்கி பழகியவர். இருவர் பற்றியும் உங்கள் பார்வையில்…

ஜனநாயக ரீதியாக, ஜனநாயகவாதியாக கட்சி நடத்துபவர் கருணாநிதி. ஜெயலலிதா பொறுப்புக்கு வந்த பின், எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்தே அமைச்சர்களாக இருந்த பலர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 1991ல், ஜெயலலிதா ஆட்சியின் போது, அவரே தேர்வு செய்து அமைச்சர்களாக இருந்தோரில் பெரும்பாலானோர் தற்போது கட்சியில் இல்லை.

எனக்கு ஜெயலலிதாவோடு கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது, அவரோடு ஒத்துப் போயிருக்கலாம் என்று சொன்னவர்கள் உண்டு. தவறு ஏதும் இருந்தால் விளக்கம் கேட்காமல், கன்னியாகுமரியில், ஆஸ்டின் முதல், சென்னையில், மாவட்டச் செயலர் சேகர்பாபு வரை நீக்கப்படுவது தொடர்ந்து கொண்டு தான் வருகிறது.

ஜெயலலிதா புத்திசாலி, ஆங்கில புலமை உள்ளவர், தற்போது அனுபவமும் வந்துவிட்டது, அதிகாரிகள் ஒத்துழைப்போடு ஆட்சி நடத்த முடியும் எனக் கூறப்படுவதெல்லாம் உண்மை தான். ஆனால், எம்.ஜி.ஆர்., காலத்தில் 43 சதவீதமாக இருந்த அ.தி.மு.க., ஓட்டு வங்கி, தற்போது, 28 ஆக குறைந்துள்ளது என்றால், கட்சியை அவர் நடத்தும் திறனைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *