டெல்லி: உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த 31 வயது வாலிபர் ரோஹித் சேகரின் தந்தைதானா என்பதை அறிவதற்கான டிஎன்ஏ சோதனைக்கு தேவையான ரத்த மாதிரியை ஜூன் 1ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
உ.பி. மாநில முதல்வராக, உத்தரகாண்ட் மாநில முதல்வராக, ஆந்திர மாநில ஆளுநராக இருந்தவர் என்.டி.திவாரி. கடைசியாக இவர் ஆந்திர ஆளுநராக இருந்தபோது பெண்களுடன் ஆளுநர் மாளிகையில் கொட்டமடித்து சிக்கி பதவியை விட்டு விலகிச் சென்றார்.
அவர் மீது உ.பியைச் சேர்ந்த ரோஹித் சேகர் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், எனது தாயார் உஜ்வாலா சர்மாவுக்கும், என்.டி.திவாரிக்கும் இடையே ஏற்பட்ட உறவில் நான் பிறந்தேன். என்னை தனது மகனாக ஏற்க திவாரி மறுக்கிறார். ஆனால் அவர்தான் எனது தந்தை. எனவே என்னை திவாரியின் மகனாக அறிவிக்க வேண்டும் என்று கோரி நீண்ட காலமாக சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
சேகரின் தந்தைதான் திவாரியா என்பதை உறுதி செய்ய திவாரிக்கு டிஎன்ஏ சோதனை நடத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் அதற்கு ஒத்துழைக்க திவாரி மறுத்து வருகிறார்.
இந்த நிலையில் ஜூன் 1ம் தேதி திவாரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். அப்போது அவரது ரத்த மாதிரியைத் தர வேண்டும் என்று இன்று கோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உயர்நீதிமன்ற இணைப் பதிவாளர் தீபக் கார்க் கூறுகையில், இந்த வழக்கில் தொடர்புடைய திவாரி, ரோஹித் சேகர், அவருடைய தாயார் உஜ்வாலா சர்மா ஆகியோர் அன்றைய தினம் நேரில் ஆஜராக வேண்டும். அப்போது அனைவரும் ரத்த மாதிரியை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
திவாரி உள்ளிட்ட மூன்று பேரின் ரத்த மாதிரியை எடுத்துப் பரிசோதிக்க டாக்டர் ஒருவரையும் கோர்ட் ஏற்கனவே நியமித்துள்ளது. இந்த டிஎன்ஏ சோதனைக்கான செலவுகளை மூன்று பேரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகத்தில் சோதனை நடைபெறவுள்ளது.
Leave a Reply