மதுரை: மதுரை தெற்குவாசல் போலீஸ் ஸ்டேஷன் அருகே நேற்று பட்டப்பகலில், நகை ஆசாரி மற்றும் அவரது தாயை கட்டிப்போட்ட மர்ம கும்பல், கத்திமுனையில் 30 சவரன் நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பியது.
மதுரை தெற்குமாரட்டு வீதி, சப்பாணி கோவில் பஸ் ஸ்டாப் பகுதியில் எந்நேரமும் போக்குவரத்து அதிகமிருக்கும். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வெறிச்சோடி காணப்பட்டது. அருகிலேயே தெற்குவாசல் போலீஸ் ஸ்டேஷனும் உள்ளது. சப்பாணி கோவில் பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்த நகை ஆசாரி பார்த்திபன் (25). இவரது வீட்டிற்குள் நேற்று மாலை 4 மணிக்கு ஐந்து பேர் கொண்ட மர்மக் கும்பல் கத்தியுடன் புகுந்தது. பார்த்திபன் மற்றும் அவரது தாய் இந்திராணி(58)யின் கைகளை சேலையால் கட்டி, குளியலறைக்குள் தள்ளினர். பின், வீட்டின் கதவை உட்புறமாக பூட்டினர். பீரோவிலிருந்த 15 சவரன் நகை, ஆர்டரின் பேரில் செய்வதற்காக வைத்திருந்த 15 சவரன், மொத்தம் 30 சவரன் நகையை கொள்ளையடித்துவிட்டு அக்கும்பல் தப்பியது. தடயங்களை மறைக்க மர்ம கும்பல் வீட்டின் சுவர் மற்றும் உட்புற பகுதியில் தண்ணீரை ஊற்றிவிட்டிருந்தது. பின் பார்த்திபன், இந்திராணி கட்டை அவிழ்த்துவிட்டு வெளியேறி தெருவில் கூச்சலிட்டனர். குற்றப்பிரிவு துணைக் கமிஷனர் மோனிக்ராவ் தலைமையில் போலீசார், மோப்பநாயுடன் துணையுடன் வீட்டை சோதனை செய்தனர். தெற்குவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
Leave a Reply