அபாயம்!ஐந்து மாநிலங்களில் நக்சல் பெரும் நாசவேலை… மே.வங்கத்தை தொடர்ந்து மத்திய அரசு எச்சரிக்கை

posted in: மற்றவை | 0

லால்கார் (மேற்கு வங்கம்): லால்காரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு “பந்த்’ நடந்த நக்சலைட்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இதையடுத்து, இந்த ஐந்து மாநிலங்களிலும் ரயில் கவிழ்ப்பு உள்ளிட்ட நாசவேலை நடக்கும் என்பதால், சம்பந்தபட்ட மாநில அரசுகளை, மத்திய அரசு உஷார் படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் நக்சலைட்களின் கோட்டையாக விளங்கிய லால்கார் கிராமத்தையும், அங்கிருந்த போலீஸ் நிலையத்தையும் பாதுகாப்புப் படையினர் மீட்டனர். இதையடுத்து, அங்கு நக்சலைட்கள் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற கிராமங்களையும் மீட்பதற்கான முயற்சிகளை பாதுகாப்புப் படையினர் துவங்கியுள்ளனர். லால்காரில் இருந்து அடுத்த ராம்கார் நோக்கி பாதுகாப்புப் படையினர் முன்னேறி வருகின்றனர். இங்கு 17க்கும் மேற்பட்ட கிராமங்கள், நக்சலைட்களின் பிடியில் உள்ளன. அவற்றை மீட்பதற்காக பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கைகளை துவங்கியுள்ளனர். இந்த கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் கண்ணிவெடிகள் புதைக்கப் பட்டுள் ளன.

இதனால், பாதுகாப்புப் படையினர் மெதுவாக முன்னேறி வருகின்றனர். பழங்குடியினர் ஓட்டம்: பாதுகாப்புப் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபடுவதை அடுத்து, அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு, காடுகளுக்கு ஓட்டம் பிடித்துள்ளனர். ஆண்கள் நடமாட்டமே இல்லை. லால்கார், ஜர்க்ராம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த கடைகள் நான்கு நாட்களாக மூடிக் கிடப்பதால், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பழங்குடியின மக்கள் திண்டாடி வருகின்றனர். நக்சலைட்கள் பலி: இதற்கிடையே, லால்காரில் நடந்த சண்டையின்போது ஆறு நக்சலைட்கள் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு மிட்னாபூர் மாவட்ட எஸ்.பி., மனோஜ் குமார் வர்மா கூறுகையில், “லால்காரில் நடந்த சண்டையில் ஆறு நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.

நக்சலைட்களிடம் இருந்து மீட்கப்பட்ட பகுதிகளில் போலீஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப் பட்டுள்ளது’ என்றார். நக்சலைட்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த சண்டையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோபிந்தா தாவ்ன் நேற்று முன்தினம் கொல்லப்பட்டார். இது, திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு உஷார்: இந்நிலையில், லால்காரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், ஒரிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு “பந்த்’ நடத்த நக்சலைட்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனால், ஐந்து மாநிலங்களிலும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை, உஷாராக இருக்கும்படி மத்திய அரசு எச்சரித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: “பந்த்’தின் போது ஐந்து மாநிலங்களிலும் நக்சலைட்கள் நாசவேலைகளை அரங்கேற்றலாம் என, உளவுத் துறை எச்சரித்துள்ளது. லால்கார் சம்பவத்தால் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால், பிரச்னைக்குரிய பகுதிகளுக்குச் செல்வதை அரசியல்வாதிகள், பொதுமக்கள் மற்றும் அரசு சாராத அமைப்புகள் தவிர்க்க வேண்டும். ரயில், பஸ் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நக்சலைட்கள் அசம்பாவிதங்களை நிகழ்த்தக் கூடும் என உளவுத் துறை எச்சரித்துள்ளது. ரயில் கவிழ்ப்பு, பஸ்கள் மீது குண்டுவீச்சு அபாயம் இருக்கலாம் என்று எச்சரித்துள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தபட்ட மாநிலங்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். மற்ற மாநிலங்களும் கவனமாக இருக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படும். பாதுகாப்புப் படையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *