சென்னை: மஹிந்திராவிடமிருந்து பிரிந்து இந்திய சந்தையில் தனித்து களமிறங்கும் ரினால்ட் நிறுவனம், இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
வரும் திங்கட்கிழமை, தனது முதலாவது செடான் காரான புளூயன்சை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் அந்த நிறுவனம், அடுத்த ஆண்டு இறுதிக்குள் 5 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் சீக்கிரமாக இந்தியாவின் பிரபலமான கார் பிராண்டாக உருவெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளது.
ரினால்ட் இந்தியா பொதுமேலாளர் மார்க் நாசீப் கூறுகையில்,”வெகுவிரைவாக இந்திய சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அடுத்தடுத்து புதிய மாடல்களை அறிமுகம் செய்வதன் மூலம், இந்திய சந்தையில் பிரபலமான கார் நிறுவனமாக மாறுவோம்.
வரும் 2020ம் ஆண்டில் இந்தியாவில் 60 லட்சம் கார்கள் விற்பனையாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போது, எங்களது நிறுவனம் 5 சதவீத இடத்தை தக்கவைத்துக்கொள்ள வியூகங்களை வகுத்து செயல்படுவோம்,” என்றார்.
காம்பெக்ட் ரகத்தில் டொயோட்டோவின் கரோல்லா மற்றும் வோக்ஸ்வேகனின் ஜெட்டா ஆகிய கார்கள் சந்தையில் முக்கிய இடம் வகிக்கின்றன. மேலும், கடந்த ஆண்டு, 10,707 டொயோட்டோ கொரல்லோ ஆல்டிஸ் கார்கள் விற்பனையாகி உள்ளது.
இதை மனதில்கொண்டே, தனது புளூயன்ஸ் காம்பெக்ட் காரை முதலாவதாக ரினால்ட் களமிறக்குவதாக கருதப்படுகிறது. மேலும், இந்த ரகத்தில் போட்டி குறைவாக உள்ளதால், எளிதில் சந்தையில் காலூன்றலாம் எனவும் ரினால்ட் கணக்கு போட்டுள்ளது.
மேலும், புளூயன்ஸ் காரை குறைந்த விலை ரகத்தில் அறிமுகப்படுத்தப்படுமா என்று கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ரினால்ட் வட்டாரங்கள், இந்த விஷயத்தில் படுரகசியம் காத்து வருகின்றன.
Leave a Reply