கல்லூரிகளில் போட்டி அதிகமாகி உள்ளது. இதனால் கல்வியின் தரம் உயர்ந்துள்ளது. கட்டணம் குறைந்துள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி சட்டசபையில் தெரிவித்தார்.
தமிழகத்தில் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ள போதிலும், அவற்றின் தரம் தாழ்ந்துள்ளது என்று அதிமுக உறுப்பினர் சி.வி. சண்முகம் செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார்.
உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடி புதன்கிழமை நடைபெற்ற மானியக் கோரிக்கை பதிலுரையில் பேசியதாவது:
”தேசிய அளவில் 18 முதல் 24 வயது வரை உள்ளவர்களில் 9 சதவீதம் பேர் உயர்கல்வி பெறுகின்றனர். தமிழகத்தில் 2005-ம் ஆண்டில் 10.5 சதவீதம் பேர் உயர்கல்வி பெற்றனர். இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே, ஏற்கெனவே கூறியது போல் 2010-ல் அது 15 சதவீதமாக உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இதனுடன் மேல்நிலைக் கல்வி முடிப்பவர்களில் 90 சதவீதம் பேர் உயர்கல்வி பெறுகின்றனர். தவிர, இங்கு படிப்பை இடையில் நிறுத்துவது இல்லை.
கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆகியவற்றில் கல்விக் கட்டணம் ரத்து போன்ற சலுகைகள், கல்லூரிகளில் ஷிப்ட் முறை, மொழி ஆய்வுக் கூடங்கள் அமைத்தல், நவீன வகுப்பறைகள் அமைத்தல் போன்ற திட்டங்களை முதல்வர் கருணாநிதி அளித்துள்ளார். இதனால் மாணவர்களின் எண்ணிக்கை 2005-06-ல் இருந்ததை விட இப்போது இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
நுழைவுத் தேர்வை முறைப்படி ரத்து செய்ததன் மூலம் 10 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமப்புற மாணவர்கள் பயனடைந்துள்ளனர். முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத ஒதுக்கீடு அளித்ததன் மூலம் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 610-ல் இருந்து 2,565 ஆக உயர்ந்துள்ளது.
அருந்ததியினருக்கு அளிக்கப்பட்ட உள் ஒதுக்கீடு இந்த ஆண்டு பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கு வழங்கப்பட உள்ளது.
பெண்கள் ஆண்களுக்குச் சமமாகவும், அதிகமாகவும் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தவிர, காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்ஸ் சொல்லியது போல் கல்லூரிகளில் போட்டி அதிகமாகி உள்ளது. இதனால் கல்வியின் தரம் உயர்ந்துள்ளது; கட்டணம் குறைந்துள்ளது” என்றார் பொன்முடி.
Leave a Reply