நொய்டா : உ.பி.,யில், கலவரம் நடந்த பகுதிக்கு செல்ல முயன்ற, மத்திய இணை அமைச்சர் சச்சின் பைலட், நேற்று கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, விவசாயிகள் பிரச்னையில், பகுஜன் சமாஜ் கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையேயான மோதல், மேலும் தீவிரமடைந்துள்ளது.
உ.பி.,யில் நொய்டா அருகே, சாலைத் திட்டங்களுக்காக, விளை நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிராக, விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தங்களின் நிலங்களுக்கு, மிகக் குறைந்த அளவில் இழப்பீடு தரப்படுவதாக, அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, பட்டா பர்சவுல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில், இரு தரப்பிலும், தலா இருவர் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, பட்டா பர்சவுல் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் நடத்திய தாக்குதலில் ஏராளமான விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்த விஷயத்தை முன்வைத்து, போராட்டம் நடத்தி வருகின்றன.
சச்சின் பைலட் கைது: காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சருமான சச்சின் பைலட், நேற்று உ.பி.,க்கு வந்தார். கலவரத்தில் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகள், தஸ்னா என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு சென்ற சச்சின் பைலட், அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், கலவரம் நடந்த பட்டா பர்சவுல் கிராமத்துக்கு, தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். ஆனால், வழியிலேயே அவர்களை போலீசார் மடக்கினர். சச்சின் பைலட்டும், அவருடன் வந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து சச்சின் பைலட் கூறுகையில், “”பட்டா பர்சவுல் கிராமத்தில் நடந்த கலவரம் குறித்து, முழுமையான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் உறவினர்களை சந்தித்து, ஆறுதல் கூறுவதற்காகவே அந்த கிராமத்துக்குச் சென்றேன். சட்டம், ஒழுங்கை எந்த வகையிலும் மீறவில்லை. என்னை கைது செய்தது தவறான நடவடிக்கை,” என்றார். இதற்கு பின், சிறிது நேரம் கழித்து அவர், விடுலை செய்யப்பட்டார்.
நேரடி மோதல்: விவசாயிகளுக்காக போராட்டம் நடத்த முயன்ற, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், கடந்த சில நாட்களுக்கு முன், கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் பலரும், மாயாவதி அரசுக்கு எதிராக, கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சச்சின் பைலட்டும் நேற்று கைது செய்யப்பட்டார்.
உ.பி., அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், “நொய்டா விவசாயிகள் பிரச்னையை, காங்கிரஸ் கையில் எடுத்துள்ளதும், காங்கிரசின் முயற்சிகளுக்கு எதிராக, முதல்வர் மாயாவதி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதும், உ.பி., அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், விவசாயிகள் பிரச்னையில், காங்கிரசுக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே, நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில், இந்த பிரச்னை மேலும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றன.
அதே சமயம், மத்திய அரசுக்கு தேவைப்பட்டால், பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தருவது இல்லையெனில், அரசின் எண்ணிக்கையை லோக்சபாவில் காப்பாற்றும் வகையில் தொடர்ந்து செயல்படுவது தொடரும். அது பிரச்னைகளை முன்வைத்து ஆதரவு தருவது என்பதோடு, உ.பி., முதல்வர் மாயாவதியை நிர்பந்த சூழ்நிலையில் வைக்காமல் இருக்கும் முயற்சி என்றும் கூறப்படுகிறது.
இழப்பீடு அறிவிப்பு: இதற்கிடையே, பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கலவரம் நடந்த பட்டா பர்சவுல் கிராமத்தில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, மத்திய அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்படும்.
கலவரத்தில் படுகாயமடைந்த விவசாயிகளுக்கு, தலா 50 ஆயிரம் ரூபாயும், சிறிய அளவில் காயமடைந்த விவசாயிகளுக்கு, தலா 10 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பட்டா பர்சவுல் கிராமத்தில் நடந்த கலவரம் குறித்து, நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply