சேலம்: டீசல் விலையை உயர்த்தினால் நாடு தழுவிய லாரி ஸ்டிரைக் நடைபெறும் என அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சேலத்தில் விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மத்திய அரசு பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மட்டும் தான் எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளது. டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை.
கச்சா எண்ணெய் விலை 100 டாலராக இருந்த போது கூட விலையை உயர்த்தவில்லை. தற்போது, டீசல் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அரசிடம் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
மண்ணெண்ணெய்க்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ. 16 மானியம் தருகின்றனர். அந்த மானியம் இன்றுவரை தொடர்கின்றது. மண்ணெண்ணெய் மானியத்தை குறைத்தால் டீசல் விலை குறையும்.
டீசல் விலை உயரும் போதெல்லாம் உணவு பொருட்களின் விலை உயர்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
டீசல் விலை என்று உயர்த்தப்படுகிறதோ அன்று முதல் நாடு தழுவிய லாரி ஸ்டிரைக் நடைபெறும்.
எங்களின் அகில இந்திய மோட்டார் காங்கிரசின் செயற்குழு கூட்டம் இன்று(23-ம் தேதி) டெல்லியில் நடைபெறுகிறது. அதில் இது குறித்த இறுதி முடிவு எடுக்க உள்ளோம்.
தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ப்ரீமியம் தொகையை 68 சதவீதம் உயர்த்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சேலம் டோலை அகற்ற சொல்லி மத்திய அரசிடம் நாங்கள் வைத்த கோரிக்கை 90 சதவீதம் ஏற்கப்பட்டிருக்கிறது. விரைவில் டோல்கேட் மாற்றி அமைக்கப்படும் என்று நம்புகின்றோம். இல்லையெனில் போரட்டம் வெடிக்கும் என்றார்.
Leave a Reply