சென்னை : “குறிப்பிட்ட இடத்திலேயே பணியாற்ற வேண்டும் என, அரசு ஊழியர்கள் உரிமை கோர முடியாது’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பொதுப்பணித் துறையில் செயற் பொறியாளராக பணியாற்றிய ராஜகோபால் என்பவர், திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கும், மகேஸ்வரன் என்பவர் சென்னையில் இருந்து குடியாத்தத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து இருவரும், ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். தேர்தல் அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்ட பின், இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என, மனுக்களில் கூறப்பட்டது.இதை, நீதிபதி தனபாலன் விசாரித்தார். பொதுப்பணித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மூன்று ஆண்டுகளுக்கும் மேல், ஒரே இடத்தில் இவர்கள் பணியாற்றியுள்ளனர் என்றும், குறிப்பிட்ட காலத்துக்குப் பின் இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது.
மனுக்களை விசாரித்த நீதிபதி தனபாலன் பிறப்பித்த உத்தரவு:இரண்டு அதிகாரிகளும், அந்தந்த இடத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளனர். அந்தக் காலம் முடிந்த பின், இடமாறுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் அறிவிப்பாணை பிறப்பிப்பதற்கு முன், இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை ஆவணங்களை சரிபார்க்கும் போது காண முடிகிறது.ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே தன்னை நியமிக்க வேண்டும் என்றோ அல்லது தனது விருப்பப்படி ஒரு குறிப்பிட்ட இடத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றோ எந்த அரசு ஊழியர், பொதுத்துறை ஊழியரும் உரிமை கோர முடியாது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றம் செய்வது என்பது பணி நிபந்தனைகளின்படி தான். மேலும், அது பொதுநலனுக்கும், திறமையான நிர்வாகத்துக்கும் தேவையானது.உள்நோக்கம் கொண்டோ, விதிகளை மீறியோ இடமாறுதல் உத்தரவு பிறப்பித்தால் ஒழிய, மற்றபடி இந்த விஷயத்தில் கோர்ட்டுகளோ, தீர்ப்பாயங்களோ சாதாரணமாக தலையிட முடியாது. எனவே, இந்த இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு நீதிபதி தனபாலன் உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply