டெல்லி: டெல்லி அருகே பரீதாபாத் என்ற இடத்தில் குடியிருப்புப் பகுதியில் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியானார்கள்.
9 பேர் அமரும் வகையிலான அந்த விமானத்தில் 7 பேர் இருந்துள்ளனர். இந்த விமானம் புதன்கிழமை இரவு டெல்லி அருகே பரீதாபாத் என்ற இடத்தில் 23வது செக்டாரில் உள்ள இரண்டு வீடுகளின் மீது விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 7 பேர்உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த 10 பேரில் 3 பேர் விமானம் விழுந்த வீடுகளில் வசித்து வந்தவர்கள். நான்கு பேர் இந்த கோர விபத்தில் காயமடைந்தனர்.
விபத்து நடந்தபோது சம்பந்தப்பட்ட வீடுகளில் 10 பேர் இருந்ததாக கருதப்படுகிறது. விமானம் விழுந்து நொறுங்கியதும் தீப்பிழம்பு வானுயர எழுந்தது. பெரும் புகைமூ்ட்டமும் காணப்பட்டது. விமானத்தின் சிதறல்கள் அந்தப் பகுதி முழுவதும் சிதறிக் காணப்பட்டது.
பிலேட்டஸ் பிசி12 என்ற ஒற்றை என்ஜின் கொண்ட அந்த வி்மானம், பாட்னாவிலிருந்து வந்து கொண்டிருந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ராகுல் ராஜ் என்பவருக்கு டெல்லியில் சிகிச்சை அளிப்பதற்காக அவரை ஏற்றிக் கொண்டு வந்தபோதுதான் விபத்து நடந்தது.
ராகுல் ராஜ் தவிர இரண்டு டாக்டர்கள், இரண்டு உதவியாளர்கள், இரண்டு விமான ஊழியர்கள் அதில் இருந்தனர்.ராகுல் ராஜுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருந்தது. பாட்னா மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ப்பதற்காக கொண்டு வந்தபோது கோர விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விமானம் விபத்துக்குள்ளான சமயத்தில் 11,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. விமான நிலையத்தில் இறங்க இடமில்லாததால் சிறிது நேரம் பறந்து கொண்டிருக்கும்படி ஆம்புலன்ஸ் விமானத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த சமயத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக விமானம் தடுமாறி விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய விமானம் 2005ம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகும்.
Leave a Reply