என் தோல்வியை கட்சியினரே எதிர்பார்த்தனர்’ : மாஜி மந்திரி வீரபாண்டி ஆறுமுகம் புலம்பல்

posted in: அரசியல் | 0

சேலம் : “”சட்டசபை தேர்தல் தோல்வி நமக்கு புதியதல்ல; சங்ககிரியில் என்னுடைய தோல்வியை கட்சியினரே மிகவும் எதிர்பார்த்தனர்,” என தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டத்தில், வீரபாண்டி ஆறுமுகம் நிர்வாகிகளிடத்தில் கூறினார்.

சட்டசபை தேர்தலில், சேலம் மாவட்டத்தில் தி.மு.க., கூட்டணி போட்டியிட்ட, 11 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. சங்ககிரி தொகுதியில் வீரபாண்டி ஆறுமுகம் வெற்றி பெறுவார் என நம்பிக்கையுடன் இருந்த தொண்டர்களும் ஏமாற்றமடைந்தனர்.

தேர்தல் முடிவுக்கு பின், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்ற பொது உறுப்பினர் கூட்டம், சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கலைஞர் மாளிகையில் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகம் பேசியதாவது: ஜூன் 3ம் தேதி, தி.மு.க., தலைவர் கருணாநிதி பிறந்த நாளை, சிறப்பாக கொண்டாட வேண்டும். தேர்தலின் போது அகற்றப்பட்ட கட்சி கொடிக் கம்பங்களை, அந்தந்த இடங்களில் புதியதாக நிறுவி வர்ணம் பூசி, கொடியேற்ற வேண்டும். பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகம் வழங்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றார்.

தேர்தல் தோல்வி நமக்கு புதியதல்ல; மக்களுக்காக எவ்வளவோ நல்ல பல திட்டங்களை கொண்டு வந்தோம். சேலம் மாவட்டத்தில் மட்டும் தி.மு.க., தோல்வியை தழுவவில்லை. தமிழகம் முழுவதும் தோல்வி நிலைக்கு தள்ளப்பட்டது. சங்ககிரியில் என்னுடைய தோல்வியை, நமது கட்சியினர் பலர் எதிர்பார்த்தனர். இனி தோல்வியை மறந்து, தலைவர் பிறந்த நாள் விழாவை அனைவரும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். இவ்வாறு வீரபாண்டி ஆறுமுகம் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *