புதுடில்லி: “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய மீடியா ஆலோசகர் நிரா
ராடியாவின் டெலிபோன் உரையாடல்களை தொகுத்து வெளியிடப்பட உள்ள புத்தகத்திற்கு, டில்லி ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
“2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல்கள் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இதில், பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு மீடியா ஆலோசகராக விளங்கியவர் நிரா ராடியா. இவர், வைஷ்ணவி கம்யூனிகேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முக்கியமாகச் செயல்பட்டதாகக் கூறப்பட்டது. இவர், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரிகளுடன் நடத்திய டெலிபோன் உரையாடல்கள் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. இந்நிலையில், நிரா ராடியா குறித்து, “குளோஸ் என்கவுன்டர்ஸ் வித் நிரா ராடியா’ என்ற தலைப்பில் உள்ள புத்தகத்தை, வக்கீல் ஆர்.கே.ஆனந்த் என்பவர் எழுதியுள்ளார். இந்த புத்தகம் அடுத்த மாதம் வெளியிடப்பட இருந்தது. இந்நிலையில், இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், “நிரா ராடியாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவாக உள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வி.கே.ஜெயின், ஆர்.கே.ஆனந்தின் புத்தகத்திற்கு தடை விதித்தார். ஏற்கனவே நிரா ராடியா குறித்து, “மோனிகா’ என்ற திரைப்படம் வெளியாக இருந்தது. இதை எதிர்த்து, டில்லி ஐகோர்ட்டில் நிரா ராடியா மனு தாக்கல் செய்து, படத்தை வெளியிட தடை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply