திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே சாண எரிவாயு அடுப்பில், பால் பொருள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை இயங்கி வருகிறது.திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உச்சப்பட்டி கிராமத்தில், “கோடை பார்ம்ஸ்’ என்ற பாலாடைக் கட்டி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, நான்கு சாண எரிவாயு கலன்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு சாண எரிவாயு கலனில் இருந்து வெளியாகும் காஸ் மூலம், இங்கு பணிபுரியும் 35 தொழிலாளர்களுக்கு தினமும் மூன்று நேரம் சமையல் செய்யப்படுகிறது. மற்ற மூன்று கலனில் இருந்து வெளியாகும் காஸ் மூலம் பாலாடைக் கட்டி தயாரிக்கத் தேவையான நீராவியை உருவாக்கப் பயன்படுத்துகின்றனர். இவர்கள் சாண எரிவாயு கலனில் புதிய நுட்பத்தையும் பயன்படுத்துகின்றனர்.
பாலாடைக் கட்டி தயாரித்த பின்னர் வெளியேறும் பால் கழிவையும், இந்த எரிவாயு கலனில் சேர்த்து விடுகின்றனர். இதன் மூலம் கூடுதல் காஸ் கிடைக்கிறது. காஸ் தயாரித்த பின்னர் வெளியேறும் கழிவுகளில் இயற்கை உரம் தயாரித்து, பண்ணையில் வளர்க்கப்படும் மரங்களுக்கு பயன்படுத்து கின்றனர்.இத்தொழிற்சாலை இயக்குனர் ஹரி கூறியதாவது: தற்போது அதிகரித்து வரும் மின் தட்டுப்பாட்டினைச் சமாளிக்கவும், டீசல் விலையை எதிர்கொள்ளவும், எரிபொருள் தேவைக்கான புதிய நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. மிகக் குறைந்த செலவில் தரமான எரிவாயு தயாரிக்க, சாண எரிவாயு கலன் மிகவும் உதவியாக உள்ளது. நாங்கள் பாலாடைக் கட்டி எடுத்த பின்னர் வெளியாகும் கழிவுப் பாலை ஊற்றுவதால், கலனில் இருந்து வழக்கத்தை விட மூன்று மடங்கு காஸ் அதிகம் கிடைக்கிறது.
இதில், அழுத்தம் அதிகரிக்கவும் ஒரு நுட்பத்தைப் பயன்படுத்தி காஸ் இயக்கி வருகிறோம். இதற்கு ஏற்ப நாங்கள் ஸ்டீம் அடுப்பை வடிவமைத்து உள்ளோம். காஸ் கிடைக்காத சில நேரங்களில் விறகு பயன்படுத்துவோம். எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக சாண எரிவாயு காஸ் பயன்படுத்தி வருகிறோம். தற்போது மின் தடை அதிகரித்துள்ளதால், இந்த காஸ் மூலம் ஜெனரேட்டர் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு ஹரி தெரிவித்தார்.
Leave a Reply