டெல்லி: இந்தியாவின் ரயில்வே துறையில் மோசமான கால கட்டம் எது என்று கேட்டால் மமதா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்த கால கட்டம்தான் என்று கண்ணை மூடிக் கொண்டு கூறி விடலாம்.
அந்த அளவுக்கு மிகவும் குளறுபடியான அமைச்சராக செயல்பட்டவர் மமதா. அதிலும், அமைச்சர் பதவியை டெல்லியிலிருந்து அவர் செயல்படுத்தாமல் கொல்கத்தாவிலிருந்து செயல்பட்டு வந்தார். கிட்டத்தட்ட பார்ட் டைம் ரயில்வே அமைச்சராகத்தான் அவரை பலரும் கருத முடிந்தது.
அதன் விளைவை ரயில்வே துறை அனுபவித்ததோ இல்லையோ அப்பாவி மக்கள் நிறையவே அனுபவித்து விட்டனர்.
மமதா ரயில்வே அமைச்சராக இருந்தபோதும் சரி, அவர் போன பிறகும் சரி இன்னும் ரயில்வே துறை விபத்துகளிலிருந்து மீளவில்லை.
மமதா ஆட்சிக்காலத்தின்போது எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள்தான் அதிகரித்து வரும் ரயில் விபத்துகளுக்குக் காரணம் என்று கூறுகிறார்கள்.
ரயில்வே லைன்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல், அதிக அளவில் சரக்கு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தது, தப்பும் தவறுமான திட்டங்களுக்கு ஓ.கே. சொன்னது, பயணிகள் ரயில்களின் எண்ணிக்கையை திட்டமிடாமல் அதிகரித்தது ஆகியவை மமதாவின் தவறுகளாக கூறப்படுகின்றன. இதன் காரணமாகத்தான் ரயில்கள் விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளதாக ரயில்வே துறையினர் புலம்புகின்றனர்.
நேற்று நடந்த கல்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து சம்பவத்திலும் கூட விபத்து நடந்த இடத்திற்கு ரயில்வே இணை அமைச்சர்களில் 3 பேரில் ஒருவர் கூட உடனே போகவில்லை. திரினமூல் காங்கிரஸைச் சேர்ந்த ரயில்வே இணை அமைச்சர் முகுல் ராய் கூட அங்கு போகவில்லை.
ரயில்வேயில் உள்ள 16 மண்டலங்களில் ஒன்றில் கூட பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக, திருப்திகரமாக இல்லை என்று தலைமை கணக்கு அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில், இப்போது காலியாக உள்ள ரயி்லவே துறைக்கும் கூட திரினமூல் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவரைத்தான் ரயில்வே அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று மமதா நிபந்தனை விதித்துள்ளார். ஆனால் மமதாவே இப்படி இருந்தார் என்றால், அவரது எம்.பிக்கள் எப்படி இருப்பார்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே பிரதமரும், சோனியா காந்தியும் பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.
ஆனால் பயணிகள் உயிர் விஷயத்தில் பிரதமரும், சோனியா காந்தியும் இனியும் விளையாடக் கூடாது. மிகத் திறமை வாய்ந்த, அனுபவசாலியான ஒருவரையே ரயில்வே அமைச்சராக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Leave a Reply