பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவைத்தொகை ரூ.49.65 கோடி வழங்க உத்தரவு

posted in: அரசியல் | 0

சென்னை : பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவையில் உள்ள பால் பணப்பட்டுவாடாவை செய்ய, ஆவின் நிறுவனத்துக்கு, 49.65 கோடி ரூபாயை முதல்வர் வழங்கியுள்ளார்.


கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் சிவபதி தலைமையில், பால் கொள்முதலை அதிகரிப்பது தொடர்பான நடவடிக்கைகள் எடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், புதிய பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் அமைக்க வேண்டியதன் அவசியம், பால் உற்பத்தியாளர்களுக்கு பணப்பட்டுவாடா உரிய நேரத்தில் வழங்குவது, நுகர்வோருக்கு பால் வினியோகம் குறித்த நேரத்தில் செய்வது ஆகியவை குறித்து அமைச்சர் பேசினார்.

கடந்த ஆட்சியில் ஏற்பட்ட நிதியிழப்பை சரிகட்டவும், பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவையில் உள்ள பால் பணப் பட்டுவாடா செய்யவும், ஆவின் நிறுவனத்துக்கு, முதல்வர், 49.65 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதனால், பால் உற்பத்தியாளர்களுக்கு தாமதமின்றி, பால் பணப் பட்டுவாடாவை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்துக்கு வழங்க வேண்டிய நிதி உதவித் தொகையான, 6.29 கோடி ரூபாயை, திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றிய பொது மேலாளரிடம், அமைச்சர் நேற்று வழங்கினார்.

புதிய பால் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்த, தனித்தனியே மாவட்ட வாரியாக இலக்குகளை வகுத்துக் கொடுத்த அமைச்சர், ஒரு மாதத்துக்குள் இந்த இலக்குகளை எய்தி, பால் உற்பத்தியை பெருக்க வேண்டுமென உத்தரவிட்டார். பால் பணத்தை பட்டுவாடா செய்யாமல் தாமதப்படுத்தும் சங்க அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அப்போது எச்சரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *