சென்னை : விற்பனை வரிகளை உயர்த்தி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூலை 11 முதல் பொருட்கள் மீது தற்போது விதிக்கப்படும் வாட் வரி 4 ல் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்ட பொருட்களுக்கு இந்த 5 சதவீத வரி பொருந்தும். உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றுக்கான 4 சதவீத வாட் வரி ரத்து செய்யப்படுகிறது.
* 12.5 சதவீதம் வாட் வரி விதிக்கப்பட்டிருந்த பொருட்களுக்கு, இனி 14.5 சதவீத வாட் வரி விதிக்கப்படும்.
* ஏற்கனவே வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த, ஜவுளி மற்றும் ஜவுளித் துறை சார்ந்த பொருட்களுக்கு தற்போது 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. எனினும், சிட்ட நூல் மற்றும் கைத்தறி துணிகளுக்கான ‘வாட்’ வரி விலக்கு தொடரும்.
* சமையல் எண்ணெய் விற்பனையில் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வரை விற்று முதலைக் கொண்டவர்களுக்கு, இதுவரை வரி விலக்கு அளிக்கப்பட்டது. இந்த அளவு தற்போது 5 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரிய சமையல் எண்ணெய் டீலர்கள் வரி வரம்பிற்குள் வருவர்.
* புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள் வாட் வரியின் கீழ் வராத பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, தற்போது விதிக்கப்படும் 12.5 சதவீத வரிக்குப் பதிலாக, இனி 20 சதவீத வரி விதிக்கப்படும். பான் பராக், மூக்குப்பொடி மற்றும் சுருட்டு போன்ற புகையிலை பொருட்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வரி விலக்கு நீக்கப்பட்டு, இவற்றிற்கும் இனி 20 சதவீத வரி விதிக்கப்படும். அதேபோல், பீடி மற்றும் பீடி சார்ந்த புகையிலை பொருட்களுக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கு நீக்கப்பட்டு, அவற்றுக்கு 14.5 சதவீத வாட் வரி விதிக்கப்படும்.
* செல்போன், எல்.சி.டி., டிவி, டிவிடி, சிடி, ஐபாட், ஐபோன் மற்றும் செல்போன் உதிரிபாகங்களுக்கு தற்போது விதிக்கப்படும் 4 சதவீத வரி, இனி 14.5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 3,900 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply