சேலம் : தனியார் பால் நிறுவனம், பால் கொள்முதல் விலையை, லிட்டருக்கு, 1.25 ரூபாய் உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ளது.
இதனால், ஆவினுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் பலர், தனியாரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலை நீடித்தால், ஆவின் ஒன்றியங்கள் இழுத்து மூடப்படும் சூழல் உருவாகும். தமிழகம் முழுவதும், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர். மொத்தம் உள்ள, 8,600 பிரதம பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம், ஆவின் ஒன்றியங்களுக்கு பால் எடுத்து செல்லப்பட்டு, பாக்கெட்டாகவும், பால் பொருட்களாகவும் தயார் செய்து விற்பனைக்கு வருகிறது. ஆரம்பத்தில், ஆவின் பாலுக்கு இருந்த கிராக்கி தற்போது குறைந்து விட்டது. தனியார் பால் நிறுவனங்கள் பல, தமிழகத்தில் காலூன்றி உள்ளன.
ஆவினை விட தனியார் பால் குறைந்த விலையில் கிடைப்பதால், ஏழை, எளிய மக்கள் அவற்றை அதிகம் விரும்புகின்றனர். ‘ஹட்சன்’ எனும் தனியார் பால் நிறுவனம், உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை, லிட்டருக்கு, 1.25 ரூபாய் வரை உயர்த்தி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக விவசாயிகளிடையே தகவல் பரவியுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில், ஆவினை விட தனியார் பால் விற்பனை தான் அதிகம் உள்ளது. கொள்முதல் விலை உயர்த்தப்பட்டால், ஆவினுக்கு வரும் பால் வரத்து கிடுகிடுவென சரிவடைந்துவிடும். இதனால், ஆவின் ஒன்றியங்களை நம்பியுள்ள உற்பத்தியாளர்களும், நுகர்வோர்களும் பாதிப்படைவர். தமிழக அரசுக்கும், அவப்பெயர் ஏற்படும் நிலை உருவாகும்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க மாநில தலைவர் செங்கோட்டுவேல் கூறியதாவது: ஆவினில், இதரச்சத்து, 8.2 சதவீதம், கொழுப்புச் சத்து, 4.3 சதவீதம் கொண்ட ஒரு லிட்டர் பசும்பால் லிட்டருக்கு, 18 ரூபாய் வரையிலும், 8.7 சதவீத இதரச்சத்து, 6 சதவீத கொழுப்பு சத்து கொண்ட எருமைப்பாலை, 26 ரூபாயிலும் விற்கின்றனர். தனியார் பால் நிறுவனங்கள், ஒரு லிட்டர் பாலை, 30 ரூபாய்க்கு மேல் விற்கின்றனர். 7.5 சதவீத இதரச்சத்துக்கள் இருந்தாலும், அதற்குரிய கொள்முதல் விலையை கொடுக்கின்றனர். ஆனால், ஆவினில், 7.5 சதவீதத்துக்கு குறைவாக சத்துக்கள் இருந்தால், அந்த பாலை பறிமுதல் செய்கின்றனர்.
தனியார் நிறுவனங்கள் பால் வினியோகத்தை முறைப்படுத்துகின்றனர். உற்பத்தியாளர்களுக்கு அதிக விலை கொடுக்கின்றனர். நெய், வெண்ணெய் போன்றவற்றை கிலோ, 330 ரூபாய்க்கு தனியார் நிறுவனம் விற்கிறது. ஆவின், 240 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், ஆவின் ஒன்றியங்கள் அனைத்தும் நஷ்டத்துக்குள்ளாகும். காங்கிரஸ் பிரமுகருக்கு சொந்தமான அந்த தனியார் பால் நிறுவனம் விலையை உயர்த்த உள்ளதாக தகவல் வந்துள்ளது. தனியாருக்கு நிகராக, ஆவினும் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசிடம், இதை தொடர்ந்து வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply