நில அபகரிப்பு புகார்: கைது அபாயத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்

posted in: அரசியல் | 0

சேலம்: நில அபகரிப்பு விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.

சேலம் அங்கம்மாள் காலனியில் வசித்து வந்த சுமார் 24 பேரின் நிலத்தை திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 13 பேர் அபகரித்துவி்ட்டதாக மாவட்ட கலெக்டரிடம் அந்த காலனியைச் சேர்ந்த கணேசன் என்பவர் புகார் அளித்தார்.

இதன் பேரில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுன்சிலர் பூபதி, கிருஷ்ணசாமி, உலக நம்பி, ஜிம் ராமு, சித்தானந்தம், கறிக்கடை பெருமாள், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், ஆர்.டி.ஓ. பாலகுருமூர்த்தி உள்ளிட்ட 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் சேலம் 5 ரோடு சென்னீஸ் கேட்வே ஹோட்டல் எதிரே உள்ள பிரிமீயர் மில் நிலத்தை வீரபாண்டி ஆறுமுகம் அபகரித்துக் கொண்டதாக அதன் உரிமையாளர் ரவிச்சந்திரன் சேலம் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், துரைசாமி, ஆடிட்டர் துரைசாமி, அசோக் துரைசாமி, ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், ராமநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், அழகாபுரம் முரளி உள்ளிட்ட 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்குகள் தொடர்பான எப்.ஐ.ஆர். நகலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.

இதனால் இந்த வழக்குகள் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *