சமச்சீர் கல்வி தீர்ப்பை அரசு வாழ்த்தி, வரவேற்க வேண்டும்: கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை: “”சமச்சீர் கல்விக்கு வரும் தீர்ப்புக்கு வாழ்த்தும், வரவேற்பும் கூற வேண்டிய கடமை, தமிழக அரசுக்கு உள்ளது,” என, முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து, கருணாநிதி அளித்த பதில் விவரம்:

சமச்சீர் பாடத் திட்டத்திற்கு தடை விதிக்க மறுத்து, உடனே புத்தகங்களை வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளதே?
மகிழ்ச்சி. இந்த வழக்கை, 26ம் தேதி இறுதியாக விசாரிப்பதாக கூறியுள்ளனர். அப்போது, சமச்சீர் கல்விக்கு ஆதரவாக நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறேன்.

அப்படி வரும் தீர்ப்புக்கு வரவேற்பும், வாழ்த்தும் கூற வேண்டிய கடமை, தமிழக அரசுக்கு உண்டு. தி.மு.க.,வினர் கைது செய்யப்படுவதற்கு, ஆக., 1ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளீர்களே?
தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவதில் எந்த தவறுமில்லை. ஆனால், வேண்டுமென்றே கட்சியை பலவீனப்படுத்தியும், பயமுறுத்தியும் பொதுமக்களிடம் இந்த அரசு பீதியை உண்டாக்குகிறது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் கட்சி வித்தியாசம் பார்க்கக் கூடாது. அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது, அவரது கட்சியினரே நில மோசடி புகார் கொடுத்துள்ளனர். ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்படி, பலர் மீது அ.தி.மு.க.,விலும் குற்றச்சாட்டு இருக்கும் போது, அவர்களுக்கு பாலாபிஷேகம் செய்துவிட்டு, தி.மு.க.,வை பயமுறுத்துவதில் என்ன நியாயம்.

கோவையில் நடக்கும் பொதுக்குழுவில் என்ன மாதிரி விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளன?
சமச்சீர் கல்வி, தி.மு.க.,வினர் மீது போடப்பட்ட பொய் வழக்கு ஆகிய விஷயங்கள் விவாதிக்கப்படும். இதை எப்படி எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

சென்னையில், கடந்த ஆட்சியில் சில கட்டடங்கள் விதிமீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளதே?
தவறு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

நித்யானந்தா சாமியார் அந்தரத்தில் பறக்க வைக்கப் போவதாகத் தெரிவித்தது பற்றி…?
எந்த சாமியாரின் லீலைகளும், அற்புதங்களும் தி.மு.க.,வின் பகுத்தறிவு கொள்கைக்கு ஏற்புடையதல்ல. அதற்காக அந்த சாமியார்களின் மீதோ, துறவிகள் மீதோ தனிப்பட்ட முறையில் தி.மு.க., எத்தகைய தாக்குதலையும் நடத்தியதில்லை. இவ்வாறு கருணாநிதி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *