அமெரிக்க கடன் நெருக்கடியால் உலக பொருளாதாரம் பாதிக்கும் : ஐ.எம்.எப்., தலைவர் எச்சரிக்கை

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: “அமெரிக்காவின் கடன் நெருக்கடியைத் தீர்க்க விரைவில் ஒரு முடிவு எடுக்காவிட்டால், உலகப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்’ என, சர்வதேச நிதியமைப்பின் (ஐ.எம்.எப்.,) தலைவர் கிறிஸ்டைன் லகார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், பிரதிநிதிகள் சபையில் சபாநாயகர் ஜான் பாய்னர் நேற்று கொண்டு வருவதாக இருந்த மசோதா தாக்கல், பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த இழுபறியால், உலக முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். அமெரிக்கா தன் கடன் உச்சவரம்பான 14.3 டிரில்லியன் டாலரை, கடந்த மே மாதம் எட்டிவிட்ட நிலையில், கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சித் தரப்பில் மேற்கொள்ளப்பட்டன.

பரஸ்பரம் குற்றச்சாட்டு: அமெரிக்க நிதியமைச்சகம், ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் இப்பிரச்னையைத் தீர்க்காவிட்டால், அரசு அன்றாடச் செலவுகளுக்கே திண்டாட வேண்டி வரும், அரசின் கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்து விடுமென எச்சரிக்கை விடுத்திருந்த போதும் கூட, இன்று வரை அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், கடந்த 25ம் தேதி, அதிபர் பராக் ஒபாமாவும், எதிர்க்கட்சித் தலைவரும் பிரதிநிதிகள் சபை சபாநாயகருமான ஜான் பாய்னரும், தற்போதைய இழுபறிக்கு காரணம் யார் என்பது குறித்து பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டனர்.

பாய்னர் மசோதாவுக்கு எதிர்ப்பு: இதையடுத்து பேட்டியளித்த பாய்னர், 26ம் தேதி, தான் ஒரு மசோதாவை பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப் போவதாகத் தெரிவித்தார். அவரது மசோதாவுக்கு, “டீ பார்ட்டி’ இயக்கத்தின் ஆதரவு பெற்ற அவரது குடியரசுக் கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மசோதாவில் தங்களுக்கு திருப்தியளிக்கும் விதத்தில் பரிந்துரைகள் இல்லாததால், செனட்டில் நிறைவேற விட மாட்டோம் என, ஆளும் ஜனநாயகக் கட்சியினர் முன்னரே தெரிவித்துவிட்டனர். மேலும், ஒருவேளை செனட் சபையில் பாய்னர் மசோதா நிறைவேறினால், தனது பார்வைக்கு வரும்போது, “வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதைத் தடுத்து நிறுத்திவிடப் போவதாக அதிபர் ஒபாமா மிரட்டல் விடுத்திருந்தார்.

கணக்கில் தப்பு: இவை எல்லாவற்றுக்கும் மேலாக பாய்னரின் மசோதாவில், ஒட்டு மொத்த பட்ஜெட் குறைப்புத் தொகையில், 350 பில்லியன் டாலர் குறைவாகக் கணக்கிடப்பட்டிருந்தது. காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் அதைக் கண்டுபிடித்து, மசோதாவை திருத்தும்படி அவருக்கு கடிதம் அனுப்பியது. இந்தக் குழப்பங்களுக்கு இடையில், இன்று அல்லது நாளை, செனட் ஜனநாயகக் கட்சியினர் உருவாக்கியுள்ள மற்றொரு மசோதா, பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.எம்.எப்., எச்சரிக்கை: இதற்கிடையில், ஆகஸ்ட் 2ம் தேதிக்கு இன்னும் ஐந்து நாட்களே இருப்பதால், அமெரிக்காவிலும், உலகளவிலும் முதலீட்டாளர்களிடையே பதட்டம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நேற்று முன்தினம் நியூயார்க்கில் பேசிய ஐ.எம்.எப்., தலைவர் கிறிஸ்டைன் லகார்ட், “ஐரோப்பிய பிரச்னையில் அப்பகுதி தலைவர்கள் காட்டிய ஒற்றுமை மற்றும் துணிவை, அமெரிக்கத் தலைவர்கள் இப்போது இப்பிரச்னையில் காட்ட வேண்டும். அமெரிக்க கடன் நெருக்கடி, மிக மிக கவலை தரத்தக்கது. ஏனெனில், அது அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும்’ என்றார்.
இதை உறுதிப்படுத்தும் விதத்தில், பிற நாட்டு கரன்சிகளுக்கு எதிரான டாலரின் மதிப்பு நேற்று குறைந்து காணப்பட்டது. அதே நேரம், கடன் மதிப்பீட்டு நிறுவனங்களான ஸ்டாண்டர்டு அண்டு பவர் மற்றும் மூடிஸ் ஆகியவை, பிரச்னை விரைவில் தீர்க்கப்படாவிட்டால், அமெரிக்காவின் “ஏ.ஏ.ஏ.,’ என்ற குறியீடு குறைக்கப்படும் என, மீண்டும் எச்சரித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *