புதுடில்லி : “ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, இதுகுறித்து, பார்லிமென்டில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்’ என, பா.ஜ., கூறியுள்ளது.
பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான அருண் ஜெட்லி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில், பிரதமருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தொலைத்தொடர்பு துறையின், “மைக்ரோ மேனேஜ்மென்ட்’ தொடர்பான விவகாரத்தில் பிரதமருக்கு தொடர்பு உள்ளது. இது தொடர்பாக, பார்லிமென்டில் அவர் விளக்கம் அளிக்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சமீபத்தில் வெளியான தகவல்கள், பிரதமரையும் தொடர்புபடுத்தி வந்துள்ளன.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில், தொலைத் தொடர்பு துறை அமைச்சகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட விஷயங்கள் குறித்து, பிரதமருக்கு தெரியும். இந்த விவகாரத்தில், தனக்கு சம்பந்தம் இல்லை என கூறி, அவர் ஒதுங்க முடியாது. இந்த விவகாரத்தில், பிரதமர் அடிக்கடி, தன் நிலையை மாற்றிக் கொண்டுள்ளார். ஆரம்பத்தில், முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ராஜா எடுத்த நடவடிக்கைகளை, பிரதமர் பாராட்டினார். அதற்குப் பின், இந்த விவகாரம் பற்றி, தனக்கு எதுவும் தெரியாது என்றும், தன் அமைச்சர் எடுக்கும் முடிவுகள் மீது நம்பிக்கை வைத்திருந்ததாகவும் கூறினார்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து பிரதமருக்கு, ராஜா ஒன்பது கடிதங்கள் எழுதியதாகவும், முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கை குறித்து, பிரதமருக்கு அவர் தெரிவித்ததாகவும், தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து, பிரதமர் அலுவலகம் சார்பில் நேற்று (நேற்று முன்தினம்) வெளியிட்ட அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, தொலைத் தொடர்பு துறையுடன், பிரதமர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தான் தொடர்பு கொண்டிருந்தார் என்றும், முறையான தொடர்பை மேற்கொள்ள, அவர் விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இன்று (நேற்று) பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், வேறு மாதிரியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக, பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர், பார்லிமென்டில் பதில் அளிக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து பதில் அளிப்பதற்கு பதிலாக, எதிர்க்கட்சியினர் மீது, அவர் குற்றம் சுமத்துகிறார். இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: விலை உயர்வு, ஊழல், மும்பை குண்டு வெடிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை, சபையில் விவாதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள் ளது. இதுகுறித்து விவாதிப்பதற்காக, சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை. விவாதத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தும்படி வலியுறுத்துவோம். இவ்வாறு சுஷ்மா கூறினார்.
Leave a Reply