ஐதராபாத்:ஆந்திர மாநில அமைச்சர்கள் அனைவரும் வரும் 31ம் தேதிக்குள் சொத்துக் கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டும், முதல்வர் கிரண்குமார் ரெட்டி உட்பட யாரும் அதை கண்டு கொள்ளவில்லை.
பிரதமரின் உத்தரவின் பேரில், கடந்த ஜூன் 2ம் தேதி மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், அமைச்சர்கள் அனைவரும் தங்களின் சொத்துகள், கடன்கள் மற்றும் வர்த்தக விவரங்களை, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை நிறைவேற்ற இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், ஆந்திர மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் காசு கிருஷ்ண ரெட்டி மட்டுமே, தன் சொத்து விவரங்களை முதல்வர் கிரண்குமார் ரெட்டியிடம் சமர்ப்பித்துள்ளார். ஆனால், முதல்வர் கிரண்குமார் ரெட்டி உட்பட மற்ற அமைச்சர்கள் யாரும் இன்னும் தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்கவில்லை.ஆந்திர மாநில அமைச்சரவையில் முதல்வர் கிரண்குமாரையும் சேர்த்து 40 பேர் உள்ளனர். அவர்கள் எல்லாம் தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்கும்படி, மாநில அரசின் பொது நிர்வாகத் துறை பல முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், கிருஷ்ண ரெட்டியைத் தவிர, யாரும் அதை கண்டு கொள்ளவில்லை.இதனால், எதிர்க்கட்சிகள் தற்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளன. “ஒளிவு மறைவற்ற மற்றும் பரிசுத்தமான நிர்வாகம் நடக்கும் என, பறைசாற்றிக் கொள்ளும் காங்கிரஸ் தலைவர்களின் லட்சணம் இது தான்’ என்றும் குறை கூறி வருகின்றன.
Leave a Reply