முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்குத் திரும்ப உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், தமிழர் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை 10 நாள்களுக்குள் முடிக்க வேண்டும், தமிழர் பகுதிகளிலிருந்து இலங்கை ராணுவத்தை திரும்ப ப்பெறும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்து
விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையை இலங்கை அரசும் ராணுவமும் முழுவதுமாக பூர்த்தி செய்து முடிக்கும்வரை பொறுமை காத்த இந்திய அரசு இப்போது இலங்கை விவகாரத்தில் தமிழர்களின் உரிமைகளையும் நலன்களையும் காக்க வலுவான நடவடிக்கைகளைத் தொடங்கியிருகிறது.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர்க பாசில் ராஜபக்சே (இலங்கை அதிபரின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர்), ராணுவத்துறை அமைச்சர் கோத்தபய ராஜபட்ச ஆகியோரும் அதிபரின் செயலாளர் லலித் வீரசிங்கவும், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், இந்திய வெளியுறவுத்துறை செயலர் சிவசங்கர மேனன் மற்றும் ராணுவச் செயலர் உள்ளிட்ட மூவர் குழுவை புதன்கிழமை மாலையில் சந்தித்து ஆலோசனை கலந்தனர்.
அப்போது, தமிழர் பகுதிகளில் இயல்புநிலை திரும்பாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அப்பகுதியில் ராணுவத்தினரின் அளவுக்கு அதிகமான நடமாட்டம்தான் என்று சுட்டிக்காட்டிய இந்தியத் தரப்பு ராணுவத்தைப் பாசறைக்குத் திரும்பிச்செல்ல உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியது.
முகாம்களில் தமிழர்கள் போதிய உணவு, சுகாதார வசதியின்றி அடைத்துவைக்கப்பட்டிருப்பதால் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிப்பு அடைந்துவருவதால் அனைத்து முகாம்களையும் மூடிவிட்டு அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று அடுத்து கோரப்பட்டது.
தமிழர் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணியை இலங்கை அரசு உடனே தொடங்காவிட்டால், பத்து நாள்களுக்குப் பிறகு அந்தப் பணியில் ‘இந்தியா ஈடுபட்டு உதவி செய்யும்” என்று குறிப்பாக வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அதாவது, ‘இந்தியா தலையிடும்” என்று நேரடியாகவும் கடுமையாகவும் கூறாமல், ‘உதவி செய்யும்’ என்று ராஜரீகமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து இந்திய அரசு எந்த அளவுக்குத் தமிழர்கள் விஷயத்தில் தீவிரமாக இருக்கிறது என்பது இலங்கை அரசுக்குப் புரிந்திருக்கும் என்று வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் மறு சீரமைப்புக்கு அந்த நாடு எடுக்கவுள்ள அனைத்து நடவடிக்கைகளிலும் இந்தியா துணை நிற்கும், அதே வேளையில் சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கும் அனைத்து உரிமைகளும் கல்வி, வேலைவாய்ப்பில் சம வாய்ப்பும் தரப்பட வேண்டும் என்று இந்தியத் தரப்பில் வலுவாக வலியுறுத்தப்பட்டது.
தமிழ் ஈழம் வேண்டும் என்று ஆயுதம் எடுத்துப் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் கொல்லப்பட்டு அந்த இயக்கம் இப்போது செயல்பட முடியாதபடிக்கு முடக்கப்பட்டிருக்கலாம், ஆனால் தமிழர்கள் தனி நாடு கேட்டதற்கான காரணங்களை நீக்காதவரை அத்தகைய வெற்றி எதுவும் இலங்கைக்கு நிரந்தர நிம்மதியைக் கொடுத்துவிடாது என்று இந்தியத் தரப்பு ராஜபக்சே சகோதரர்களிடம் சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது.
இலங்கையின் நலனில் இந்திய அரசுக்கு உள்ள உண்மையான அக்கறை காரணமாகத்தான் தமிழ்நாட்டிலிருந்து கடும் நெருக்குதல் ஏற்பட்ட நிலையிலும் ராணுவரீதியாகத் தலையிடாமல் அமைதி காத்ததையும், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பகை நாடுகளுடன் (சீனா, பாகிஸ்தான்) இலங்கை கொஞ்சிக் குலாவுவதை ஓரளவுக்கு மேல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதையும் இச் சந்திப்பின்போது இந்தியத் தரப்பினர் இலங்கைப் பிரதிநிதிகளுக்கு உணர்த்தினர்.
அதன் விளைவாகவே, தமிழர்களுக்கு நிவாரணப் பொருள்களை ஏற்றிவந்த கேப்டன் அலி கப்பலை, இந்திய செஞ்சிலுவைச் சங்கம் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டால் நிவாரணப் பொருள்களை இலங்கையில் இறக்க அனுமதிப்பதாக அந்தத் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். இதற்கு தமிழக முதல்வர் மு. கருணாநிதி அளித்த நெருக்குதலும் முக்கிய காரணம் என்று தலைநகர வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கச்சத் தீவை ராணுவக் கேந்திரமாக்க இலங்கை முயல்கிறது, அதற்கு உதவ சீனாவும் பாகிஸ்தானும் முன்வந்துள்ளன என்ற தகவல்களை இந்தியா அலட்சியப்படுத்த முடியாது என்பதையும் அத்தகைய எந்தவொரு அத்துமீறலையும் இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் இந்தியத் தரப்பினர் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
அதையடுத்தே இலங்கைத் தரப்பில் அவசர மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கச்சத்தீவை ராணுவ நோக்கத்துக்குப் பயன்படுத்தும் திட்டமோ, அதில் பிற நாடுகளின் தலையீட்டை அனுமதிக்கும் எண்ணமோ இலங்கை அரசுக்கு இல்லை என்று இலங்கை அரசு விளக்கமும் அளித்துள்ளது. இவையெல்லாம் பத்திரிகைகளின் கற்பனையே என்றும் அது மறுத்திருக்கிறது.
தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்துக்கு மேலும் வலுவூட்டி தமிழர்களுக்கு சம உரிமைகளும் அந்தஸ்தும் அளித்து அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளப் போவதாக இலங்கை அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் 180 நாள்களுக்குள், அதாவது ஆறு மாதங்களுக்குள் தமிழர்கள் அனைவருமே வீடுகளுக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முகாம்கள் மூடப்படும் என்றும் இலங்கைப் பிரதிநிதிகள் உறுதி அளித்துள்ளனர்
Leave a Reply