வாஷிங்டன்: தாதாக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் இருந்து, இந்தித் திரைப்பட உலகமான, “பாலிவுட்’ பணம் பெற்றதாக, “விக்கிலீக்ஸ்’ வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
மும்பையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் இருந்து, கடந்தாண்டு பிப்ரவரி 1ம் தேதி வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட செய்தி ஒன்றில், அமெரிக்க தூதரக அதிகாரி கூறியிருப்பதாக, “விக்கிலீக்ஸ்’ செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த சில பத்தாண்டுகளாக பாலிவுட், மும்பை நிழல் உலக தாதாக்களோடு தொடர்பு வைத்திருக்கிறது. அரசால் அங்கீகரிக்கப்படாத துறையாக, 2000ம் ஆண்டு வரை பாலிவுட் இருந்ததால், அதற்குத் தேவைப்பட்ட நிதியுதவி அனைத்தும், கட்டுமானத் துறை மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த தொழிலதிபர்களிடம் இருந்து பெறப்பட்டது. அவர்கள், தாங்கள் கொடுத்த கடனுக்கு, 60 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வட்டி வசூலித்தனர். அதேபோல், கறுப்புப் பணம் புழங்கும் மும்பை தாதாக்கள், அரசியல்வாதிகளிடம் இருந்தும் பாலிவுட் பணம் பெற்றது. இந்திய அரசு பாலிவுட்டையும் ஒரு துறையாக அங்கீகரித்த பின், அது ஒரு தனியார் நிறுவனம் போல கிளை விட்டு வளரத் துவங்கியது. “ஸ்லம்டாக் மில்லியனர்’ போன்ற படங்கள் மேற்கத்திய சந்தைகளையும் கவர்ந்தன. ஆனால், இந்தியத் திரைப்படங்களின் இயல்புகளுடன் தயாரிக்கப்பட்ட படங்கள், மிக அரிதாகவே லாபம் பார்த்தன. அவை மேற்கத்திய மக்களையும் கவரவில்லை. இதை உணர்ந்த பாலிவுட், மேற்கத்திய திரைப்படச் சந்தையில் நுழைவதற்கு வேறு வழிகளை ஆராயத் துவங்கியது.
வெளிநாடுகளில் உள்ள தெற்காசிய மக்களை ரசிகர்களாக மாற்றுவதன் மூலம், அவர்களிடம் இருந்தே கணிசமான லாபத்தைப் பெற்றது. இவ்வாறு “விக்கிலீக்ஸ்’ வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், மும்பை தாக்குதலின் ஓராண்டு நினைவு நாளை ஒட்டி அனுப்பப்பட்ட மற்றோர் செய்தியில்,”மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக, நல்ல அரசியல் தலைமை இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி முக்கியமான திட்டங்களை நிறைவேற்றுவதில் தடுமாறி வருகிறது. கூட்டணித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர்’ என்று, அமெரிக்க தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
Leave a Reply