புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிக்கு எதிரான விசாரணையை, சி.பி.ஐ., நேர்மையான முறையில் நடத்தவில்லை; அவ்வளவு அக்கறைப்படவில்லை;
அவரிடம் உரிய வகையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில், பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், புதிதாக மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி, முன்னர் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்த போது, ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் குரூப்பிற்கு விற்கும்படி நிர்பந்தம் செய்ததாக, ஏர்செல் நிறுவனத்தின் அப்போதைய தலைவர் சிவசங்கரன் புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக, சி.பி.ஐ.,யும் அவரிடம் விசாரணை நடத்தியது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் கடந்த முதல் தேதி, அறிக்கை ஒன்றை சி.பி.ஐ., தாக்கல் செய்தது. அதில், “ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனத்திற்கு விற்கும்படி, தயாநிதி நிர்பந்தம் செய்ததற்கான ஆதாரங்கள் இல்லை. 2001 முதல் 2007 வரை தொலைத் தொடர்பு லைசென்ஸ்கள் வழங்கியதில், நிர்பந்தங்கள் செய்யப்பட்டன என்பதற்கு, எடுத்த எடுப்பிலேயே தெரியக்கூடிய ஆதாரங்கள் இல்லை’ எனத் தெரிவித்தது.
இருந்தாலும், சி.பி.ஐ., வட்டாரங்கள் இதுபற்றி கூறுகையில், “தயாநிதிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என்றாலும், அவர் குற்றமற்றவர் என சொல்லப்படவில்லை. ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் வாங்கிய பின்னர், அந்த நிறுவனத்திற்கு லைசென்ஸ் வழங்குவதில், தயாநிதி சலுகை காட்டியுள்ளார். இது குறித்து விசாரித்து வருகிறோம்’ என, தெரிவித்தன.
அதே சமயம், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங், “ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் சி.பி.ஐ., வேகம் காட்டாது’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், டில்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் நேற்று, சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிக்கு எதிரான விசாரணையை, சி.பி.ஐ., நேர்மையான முறையில் நடத்தவில்லை. “2ஜி’ விவகாரத்தில், தயாநிதியின் பங்கு குறித்த முக்கியத்துவம் வாய்ந்த உண்மைகளை கண்டுகொள்ளவில்லை. எனவே அவரிடம் முறையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியுள்ளார்.மேலும்,”2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், அரசுக்கு எந்த விதமான இழப்பும் ஏற்படவில்லை என்ற தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) அறிக்கையை, கோர்ட் ஆவணங்களில் ஒன்றாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என, இந்த ஒதுக்கீடு மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, எம்.பி., கனிமொழி உட்பட 17 பேர், டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் மனு செய்துள்ளனர். “டிராய்’ அறிக்கையை தாக்கல் செய்யும்படி, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்களின் மனு தொடர்பாக, சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ் அனுப்ப, சிறப்பு கோர்ட் நீதிபதி சைனி உத்தரவிட்டார். இதற்கிடையில் ஸ்பெக்ட்ரம் குறித்த டிராய் அறிக் கையை சி.பி.ஐ., சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.
Leave a Reply