இந்திய மாணவருக்குதவ 24 மணி நேர ‘ஹெல்ப் லைன்’ சேவை : ஆஸியில் நடவடிக்கை

posted in: உலகம் | 0

australia-200_7ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு உதவ 24 மணி நேர ‘ஹெல்ப் லைன்’ சேவை உருவாக்கப்படும் என்று அந் நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. இதனால் அந்நாட்டுக் கல்வித்துறைக்குப் பாரிய இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க சில நடவடிக்கைகளை அந் நாட்டு அரசு எடுக்க ஆரம்பித்துள்ளது.

இந்தியா சென்றிருந்த ஆஸ்திரேலிய கல்வியமைச்சர் லிசா பால், வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவியைச் சந்தித்தார்.

அப்போது இந்திய மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும், அவர்களுக்கு உதவ 24 மணி நேர தொலைபேசி ‘ஹெல்ப் லைன்’ சேவையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்திய பத்திரிகையாளர்கள் சிலரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்ற அந்நாட்டு வெளியுறவுத்துறை, நேற்று பிரதமர் கெவின் ருட்டைச் சந்தி்ப்பதற்கும் ஏற்பாடு செய்தது.

அப்போது இந்திய நிருபர்களிடம் பேசிய ருட்,

“அமெரிக்கா-இங்கிலாந்தை விட ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் பாதுகாப்பாகவே உள்ளனர்.

இந்திய மாணவர்கள் மீது நடப்பது இனவெறித் தாக்குதல் அல்ல. அது சுய லாபத்துக்காக நடக்கும் தாக்குதல்கள் தான்.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தாக்கப்பட்டுள்ளனர், கொலை செய்யப்பட்டுள்ளனர், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்பதையும் மறந்துவிடக் கூடாது. அவற்றுக்கெல்லாம் நாங்கள் இந்திய அரசைக் குற்றம் சாட்டியதில்லை. இவையெல்லாம் அரசை மீறி நடக்கும் குற்றச் செயல்கள்.

இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க சிறப்பு அதிரடிப் படைகள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *