எனது வழிகாட்டி திருக்குறள்: அப்துல் கலாம்

posted in: கல்வி | 0

சென்னை: அறிவிற்கு இலக்கணம் கற்பனை சக்தி, மனத்தூய்மை, உள்ள உறுதி. எனது வழிகாட்டி திருக்குறள் தான் என அப்துல்கலாம் பேசினார்.

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அடையாறு அவ்வை இல்ல டி.வி.ஆர்., பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்து பேசியதாவது: கடந்த 80 ஆண்டுகளுக்கு முன், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் துவக்கிய இந்த பள்ளியை திறமையாக நடத்தி, ஏராளமான மாணவ – மாணவியருக்கு கல்வி அறிவு புகட்டி வரும் இப்பள்ளி நிர்வாகிகளை பாராட்டுகிறேன். மாணவர்கள் நல்ல பண்புகளுடன், உயர்ந்த சிந்தனைகளுடன் வளர வேண்டும்.

மாணவர்கள் லட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கி, உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். இதற்கு ஒரு உதாரணமாக, மரியா கபாச்சியின் கதையைக் கூறுகிறேன். இந்த மரியா கபாச்சி நான்கு வயது குழந்தையாக இருந்தபோது, அவனின் தாய் சிறை பிடிக்கப்பட்டார். பின், சாப்பாட்டிற்கு வழியில்லாமல் அச்சிறுவன் தவித்தான். அவனுடைய ஒன்பதாவது வயதில் ஒரு மருத்துவமனையில் அவனது தாய் சந்தித்தார்.

பின், அவர்கள் அமெரிக்காவில் உள்ள மாமா வீட்டில் தஞ்சமடைந்தனர். மரியா கபாச்சி கல்வியில் சிறந்து விளங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பிறகு, ஜீன் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதற்கான நோபல் பரிசு வென்றார். இது, அவரின் விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் காட்டுகிறது. காந்தியின் ஒன்பதாவது வயதில் அவரின் தாய் ஒரு போதனை நிகழ்த்தினார். துன்பத்தில் இருக்கும் ஒருவரை மீட்டால், அது உன்னை ஒரு மனிதனாக மாற்றும் என்பதுதான் அது. எனது ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யர் அறிவு தீபமாக விளங்கினார்.

நூறு கோடி மக்கள்தான் இந்தியாவின் சொத்து. எண்ணம் உயர்வாக இருந்தால் பணிகள் உயரும். 2020 திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை, வேலை வாய்ப்பை அதிகரிக்கும். மத்திய மற்றும் மாநில அரசுகளும் அந்த லட்சியத்தை அடைய முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எனது வழிகாட்டியே திருக்குறள் தான். அறிவிற்கு இலக்கணம் கற்பனை சக்தி, மனத்தூய்மை, உள்ள உறுதி. தூக்கத்தில் கனவு வராது. கனவு காண்பவர்களால் தூங்க முடியாது. எனவே, இளைஞர்கள் ஒவ்வொருவரும் கனவு காண வேண்டும்.இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *