சென்னை: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ப.சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து, அவர் பதவி விலக வேண்டுமென, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
“அவர் உடனே பதவி விலக வேண்டும் அல்லது மத்திய அமைச்சரவையில் இருந்து அவரை, பிரதமர் நீக்க வேண்டும்’ என, தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
“2ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், 2007ல் மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த வேண்டுமென, சுப்ரீம் கோர்ட்டில், சுப்பிரமணியசாமி மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் நடந்த போது, சிதம்பரத்தின் தொடர்பு பற்றிய கடிதம் ஒன்றை, சுப்பிரமணியசாமி தாக்கல் செய்தார். கடந்த மார்ச் 25ல், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுடன் நிதித்துறை இணை இயக்குனர் பி.ஜி.எஸ்.ராவ், பிரதமருக்கு எழுதியிருந்த கடிதம் அது. அதில், “2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏல முறையில் விற்க, தொலைத்தொடர்புத் துறை பரிந்துரைத்தது. “ஆனால், அதை நிராகரித்து, 2001 விலையிலேயே, 2007ல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யலாம் என, நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் அனுமதித்துள்ளார். ஏல முறையை அவர் வலியுறுத்தி இருந்தால், ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருக்காது’ என, குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதம் வெளியானதும், தேசிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. ப.சிதம்பரம் பதவி விலக வேண்டுமென, பா. ஜ., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தின. அதேநேரத்தில், இந்த கடிதம் குறித்து, எந்த பதிலையும் அளிக்க, பிரணாப் முகர்ஜி மறுத்துவிட்டார். இதனால், இந்த கடிதத்தை பிரணாப் எழுதியது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது போல, ப.சிதம்பரம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து, நிருபர்களது கேள்விகளுக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று அளித்த பதில்: ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரம் சம்பந்தப்பட்டிருப்பது தெளிவாகி உள்ளது. தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில், இந்த ஊழலால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, சிதம்பரம் உடனே அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் அல்லது பிரதமர் அவரை, உடனே மத்திய அமைச்சரவையில் இருந்து விலக்க வேண்டும். மேலும், ராஜாவுக்கு எதிராக சி.பி.ஐ., நடவடிக்கை எடுத்தது போல, சிதம்பரத்துக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம், ராஜா மற்றும் கனிமொழிக்கு சாதகமாக அமையுமா என்பது பற்றி கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
“சி.பி.ஐ., விசாரணை தேவை’ பா.ஜ.,: “2ஜி’ ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணய விவகாரத்தில், ஏல முறையை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என, சிதம்பரம் தெரிவித்ததால், தொலைத்தொடர்பு அமைச்சகம் ஏல முறையை கைவிட்டுள்ளது. தொலைத்தொடர்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டபடி, ஏல முறையை பின்பற்றியிருந்தால், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் மோசடியே நடந்திருக்காது. எனவே, இந்தப் பிரச்னை குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டியது அவசியம். ஏல முறை தேவையில்லை என்ற ராஜாவின் கருத்துக்கு, சிதம்பரம் ஆதரவாக இருந்ததன் மூலம், அரசு கருவூலத்தின், 1.76 லட்சம் கோடி ரூபாய் திருடப்பட்டுள்ளது’ என, பா.ஜ., தகவல் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறியுள்ளார்.
மா.கம்யூ.,: கடந்த, 2008 ஜனவரியில், அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராஜாவும், நிதியமைச்சராக இருந்த சிதம்பரமும் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது தான், நுழைவுக்கட்டண விவகாரத்தை அல்லது வருவாய் பங்கீடு விவகாரத்தை மறு ஆய்வு செய்வதில்லை என, அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அருண் ஜெட்லி – ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர்: “2ஜி’ விவகாரத்தில் சிதம்பரத்தின் பங்கு குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். மத்திய அரசு, அவரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. நிதியமைச்சகத்தின் கடிதத்திற்கு, மன்மோகன் சிங் அரசு பதிலளிக்க வேண்டும்.
முரளி மனோகர் ஜோஷி – பா.ஜ., மூத்த தலைவர்: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏல முறையை அறிமுகப்படுத்தலாம் என, அப்போதைய நிதியமைச்சரான சிதம்பரத்திடம், அவரது அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர். இங்கே பல முரண்பாடுகள் நிகழ்ந்துள்ளது தெரிகிறது. சிதம்பரம் உடனே பதவி விலக வேண்டும் அல்லது அவரை உடனே பதவியில் இருந்து பிரதமர் மன்மோகன் நீக்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடியில் நாட்டிற்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பதை, தற்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முடிவு செய்து, அதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
Leave a Reply