ஐதராபாத் : கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது மைத்துனர் சீனிவாச ரெட்டிக்கு, ஜாமின் அளிக்க சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது சகோதரர்கள் பெல்லாரி மாவட்டம் மற்றும் அதையொட்டிய ஆந்திரப் பகுதிகளில், இரும்பு சுரங்கங்களை நடத்தி வருகின்றனர். குத்தகைக்குப் பெற்ற இடங்களைத் தவிர்த்து, எல்லை மீறி இவர்கள் 29.30 லட்சம் டன் இரும்புத் தாதுக்களை வெட்டி எடுத்துள்ளனர். கடந்த 5ம்தேதி இவர்களை சி.பி.ஐ., கைது செய்தது. தற்போது, ஜனார்த்தன ரெட்டியும், அவரது மைத்துனர் சீனிவாச ரெட்டியும், ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முதல் முறை இவர்கள் ஜாமின் கேட்ட போது, கோர்ட் நிராகரித்து விட்டது. தற்போது, மீண்டும் ஜாமின் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கு, சி.பி.ஐ., தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடுகையில், “”சுரங்க ஊழல் தொடர்பான விசாரணை, மும்முரமாக நடக்கிறது. ஏற்கனவே, இவர்கள் பல்வேறு விஷயங்களில், போலி ஆவணங்களைத் தயார் செய்தவர்கள். சமீபத்தில் குண்டக்கல் பகுதியில், ஒரு லாரியை வழிமறித்த போது, அதில் 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தை சீனிவாச ரெட்டியின் சகோதரர் கொடுத்ததாக, லாரி டிரைவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில், இன்னும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளது. இந்த நேரத்தில், இவர்களை ஜாமினில் வெளியே விட்டால், செல்வாக்குப் பெற்ற இந்த நபர்கள், பல சாட்சியங்களை அழித்து விடுவார்கள்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.ஆந்திராவில், தெலுங்கானா தொடர் போராட்டத்தால், வழக்கறிஞர்கள் நேற்று கோர்ட்டுக்கு வரவில்லை. எனவே, ஜாமின் குறித்த விவாதம் நேற்று நடக்கவில்லை. இந்த வழக்கு விசாரணை, வரும் 29ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சகோதரரை நீக்க கோரிக்கை: “கர்நாடக பால் கூட்டுறவு சங்கத் தலைவர் பதவியிலிருந்து, ஜனார்த்தன ரெட்டியின் சகோதரர் சோமசேகர் ரெட்டியை நீக்க வேண்டும். “சுரங்க ஊழலில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளதால், இவரை தலைவர் பதவியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது’ என, இயற்கை வள தேசிய பாதுகாப்பு கமிட்டியும், ஜன சங்க ராம் பரிஷத் என்ற அமைப்பும், கர்நாடக முதல்வர் சதானந்தா கவுடாவை வலியுறுத்தியுள்ளன.
Leave a Reply