சென்னை: “”உள்ளாட்சி தேர்தலை பார்வையிடுவதற்கு, 12 மாநில தேர்தல் கமிஷனர்கள் தமிழகத்திற்கு வரவுள்ளனர்,” என மாநில தேர்தல் கமிஷனர் அய்யர் கூறினார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் கமிஷன் அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று பிற்பகல் நடந்தது. மாநில தேர்தல் கமிஷனர் அய்யர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படவுள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்திற்கு பின், தேர்தல் கமிஷனர் அய்யர் கூறியதாவது: மாவட்டங்களுக்கு ஒருவர் வீதம், 31 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படவுள்ளனர். சென்னைக்கு மட்டும் மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், பார்வையாளர்களாக நியமிக்கப்படவுள்ளனர். இக்கூட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு பணிகள் குறித்து விவாதித்தோம். இதில் பங்கேற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தங்களுக்கு சிறிய மனவருத்தம் இருப்பதாக கூறினர். 2006ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் வன்முறை விவகாரம், ஐகோர்ட் வரை சென்றது. அப்போது தேர்தல் பார்வையாளர்களாக இருந்த சில ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளால், தேர்தல் குறித்து சுதந்திரமாக அறிக்கை தயாரித்து கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
அவர்கள் தயாரித்த அறிக்கையை, அப்போதிருந்த தலைமைச் செயலர் வாங்கி வைத்துக்கொண்டு, தன் இஷ்டத்திற்கு அறிக்கை தயாரித்து கோர்ட்டில் தாக்கல் செய்தார் என தெரிவித்தனர். இதுபோன்ற பிரச்னை இருப்பதால், சென்னையில் தேர்தல் பார்வையாளராக இருக்க விரும்பவில்லை என இன்று நடந்த கூட்டத்தில் சில ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இம்முறை அப்படி எதுவும் நடக்காது. 100 சதவீதம் மிகவும் சுதந்திரமாக செயல்படவும், அறிக்கை வழங்கவும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தேன். உள்ளாட்சி தேர்தலை பார்வையிட, 12 மாநில தேர்தல் கமிஷனர்கள் தமிழகம் வரவுள்ளனர். இங்கு அனைத்தும் வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் நடக்கிறது என்பதை தெரியப்படுத்தவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில் பின்பற்றிய அனைத்து நடைமுறைகளும், இத்தேர்தலில் பின்பற்றப்படவுள்ளன. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. இவ்வாறு கமிஷனர் அய்யர் கூறினார்.
Leave a Reply