குறுகிய காலத்துக்குள் புனர் வாழ்வளிக்கப்பட்ட சுமார் பத்தாயிரம் பேரை சமூகத்துடன் இணைத்துள்ளோம். வடக்கு, கிழக்கு, தெற்கு பேதமின்றி அனைத்து தரப்பினரும் ஒன்று சேரும் தருணம் வந்துள்ளதுடன் அனைத்து நாடுகளுக்கும் முன் உதாரணமாக இலங்கை விளங்குகின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு பெற்றுள்ள முன்னாள் போராளிகளை விடுவிக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றபோதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலகில் எந்தவொரு நாடுகளிலும் போராளிகள் குறுகிய காலத்தில் பயிற்சி வழங்கி விடுவிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார். ஆனால், எமது நாட்டில் இருபது மாதங்களில் பெருமளவானோர் பயிற்சி வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 95 சதவீதமானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களை சமூகத்துடன் இணைத்து நல்வழிகாட்டுதலே எமது நோக்கமாகும்.
வடபகுதி, இளைஞர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அது மாத்திரமன்றி எஞ்சியவர்களும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவர் . விடுவிப்பது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட ஆயிரத்து 800 பேர் விடுவிக்கப்பட் டுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார் தெரிவித்தார். வவுனியா உட்பட ஏனைய முகாம்களில் பயிற்சி பெற்ற முன்னாள் போராளிகளே விடுவிக்கப்பட்டாதாகவும், இதில் யுவதிகள் அடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Leave a Reply