சென்னை:சென்னையில் முதியோர் வசதிக்காக பணம் பெறுதல், கொடுத்தல் உள்ளிட்ட சேவைகளை, தபால் ஊழியர்கள் வீட்டிற்கே சென்று வழங்கும் புதிய திட்டத்தை, இந்திய தபால் துறை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
நாடு முழுவதும், இந்திய தபால் துறை, தபால் வழங்கல், விரைவு தபால், பார்சல், சேமிப்பு கணக்கு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. தபால் துறையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை ஈடுகட்டும் வகையில் பணபரிமாற்றம், தங்கம், கூலிங் மிஷின், பிராண்டட் நிறுவன பொருட்கள், டி.என்.பி.எஸ்.சி., விண்ணப்பங்கள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சேமிப்பு கணக்கு தொடர்பான நடவடிக்கைகளுக்கு, தபால் நிலையத்தை முதியோர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இவர்களின் வசதிக்காக, தபால் ஊழியர்கள் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று, பணம் பெறுதல், கொடுத்தல் சேவைகளை வழங்கும் புதிய திட்டம் விரைவில் சென்னையில் அறிமுகமாகிறது. முதல் கட்டமாக அசோக்நகர், தி.நகர் மற்றும் அடையாறு ஆகிய மூன்று தலைமை தபால் நிலையங்களில் இத்திட்டம் செயல்பட உள்ளது.இந்த புதிய சேவையை பெற விரும்பும் முதியோர்கள், தங்கள் பெயர் மற்றும் முகவரியை தொலைபேசி எண்களுடன், தபால் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும்.ஒரு சேவையை பெறும் முன், சம்பந்தப்பட்டவர்கள் தபால்துறையால் நியமிக்கப்படும்,”மெசஞ்சர்’ எண்ணிற்கு ஒரு நாள் முன்னரே அழைத்தால், குறிப்பிட்ட நாளில் அச்சேவையை வீட்டிலிருந்தபடியே பெறலாம் என, தபால் துறை தெரிவித்துள்ளது. இந்த சேவைக்கான கட்டணம் மற்றும் சேவை தொடர்பான முழுவிவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
Leave a Reply