வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்ப இனி சிரமம் இல்லை : அஞ்சல் துறை புதிய திட்டம்

8635632சென்னை :வெளிநாடுகளுக்கு ஒரே கட்டணத்தில் பார்சல்கள் அனுப்பும் வசதி சென்னை அஞ்சலகங்களில் அடுத்த மாதம் அறிமுகப் படுத்தப்படுகிறது. வெளிநாடுகளுக்கு அஞ்சலகங்கள் மூலம் பார்சல்கள் அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்பப்படும் பார்சல்களுக்கான கட்டணம் ஒவ்வொரு நாட்டைப் பொறுத்தும், எடையைப் பொறுத்தும் வேறுபடும்.

அயல்நாடுகள் பலவற்றில், குறிப்பிட்ட எடை கொண்ட பார்சல்களை, எந்த நாட்டிற்கு அனுப்பினாலும் ஒரே கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதே போன்ற கட்டண முறையை அமல்படுத்த அஞ்சல்துறை முடிவெடுத்தது.இதையடுத்து, தற்போது ஒரு கிலோ, இரண்டரை கிலோ மற்றும் ஐந்து கிலோ கொண்ட பார்சல்களை அனுப்புவதற்கு மட்டும் ஒரே கட்டணத்தை அமல்படுத்தியுள்ளது. இதன் படி, எந்த நாட்டிற்கு பார்சல்கள் அனுப்பினாலும், ஒரு கிலோ வரை 1,000 ரூபாயும், 1 கிலோவிற்கு மேல் இரண்டரை கிலோ வரை 1,500 ரூபாயும், இரண்டரை கிலோவிற்கு மேல் 5 கிலோ வரை 2,500 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.இந்த கட்டண முறை பொதுமக்களை அதிகம் கவரும் என அஞ்சல் துறை எதிர்பார்க்கிறது. மேலும், இந்த பார்சல்களை அனுப்ப மூன்று வகையான பெட்டிகளையும் அஞ்சல் துறை தயாரித்துள்ளது. இந்த பெட்டிகளின் வெளிப்புறம் கவர்ச்சிகரமான படங்களுடன் ‘பிளாட் ரேட் பாக்ஸ்’ என்று அச்சிடப்பட்டிருக்கும். இதில், வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு அன்பளிப்புகள், புத்தகங்கள், கைவினை பொருட்கள் போன்றவற்றை அனுப்பலாம்.பார்சல்கள் அனுப்ப விரும்புபவர்கள் பொருட்களை அப்படியே எடுத்து வந்தால், அஞ்சலகங்களில் எடை பார்த்து, அதற்கான பணத்தை செலுத்தினால், அஞ்சல் ஊழியர்களே பார்சலை வாங்கி பெட்டியில் வைத்து ‘பேக்’ செய்து விடுவர். இப்பெட்டியை எளிதில் பிரிக்க முடியாதபடி அமைக்கப்பட்டுள்ளது. பேக்கிங்கிற்கான கட்டணம் ஏதும் இல்லை. இலவசமாக செய்து தரப்படுகிறது.மேலும், பார்சல்களின் மீது ஸ்டாம்ப்கள் ஒட்ட வேண்டியதில்லை. பார்சல்கள் அனுப்பப்படும் போது அதன் மீது ‘பார் கோடு’ லேபிள்கள் ஒட்டப்படுகின்றன. இதன் மூலம் பார்சல்கள் தற்போது எங்குள்ளது என்பதை அனுப்பியவர் அறிந்து கொள்ள முடியும். அடுத்த மாதம் சென்னை அஞ்சல் வட்டத்தில் 25க்கும் மேற்பட்ட அஞ்சலகங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. குறிப்பாக சென்னை மத்திய கோட்டத்தில் தி.நகர், மயிலாப்பூர், கிரீம்ஸ் ரோடு அஞ்சலகங்களிலும், சென்னை வடக்கு கோட்டத்தில் பூக்கடை மற்றும் அடையாறு அஞ்சலகங்களிலும் இந்த ‘பிளாட் ரேட் பாக்ஸ்’ திட்டம் அறிமுகமாகிறது.முதலில் ஒரு கிலோ, 2.5 மற்றும் 5 கிலோ எடைகொண்ட பார்சல்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் விரைவில் எடை அதிகமான பார்சல்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என அஞ்சல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *