வெள்ளை மனம் கொண்டவர்கள் குழந்தைகள். கள்ளமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் நாள் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் நவம்பர் 14-ம் நாள் இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு.
1925-ம் ஆண்டு ஜெனீவாவில், குழந்தைகள் நல்வாழ்வு தொடர்பாக ஒரு சர்வதேச மாநாடு நடைபெற்றது. அதில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுக்கான கல்வி உறுதி குறித்து அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. 1954-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபை, சர்வதேச குழந்தைகள் தினம் என்ற ஒரு கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டது. இன்று பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நேரு, அரசியல் துறையில் தேர்ச்சியும், ஞானமும், அனுபவமும் எத்தனை பெற்றிருந்தும், உள்ளத்தால் குழந்தை மனதையும் பெற்று இருந்ததால், குழந்தைகளின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். குழந்தைகளுக்கு சரியான முறையில் கல்வி போதிக்கப்பட, வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும். அதை தெரிந்துகொண்டு, நிறைவேற்ற பெற்றோர் முயற்சிக்க வேண்டும். குழந்தைகள் தினத்தில் பெற்றோர், ஆசிரியர்கள் தத்தம் குறைபாடுகளை நீக்கிவிட்டு, குழந்தைகளின் ஆர்வத்தையும், அனுபவத்தையும், ஆசைகளையும், அணுகுமுறைகளையும், மனநிலையையும் கூர்மையாக கவனிக்க வேண்டும்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு, அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே. குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான், எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும். குழந்தைப் பருவத்தில் நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். தங்கள் குழந்தைகளை, மற்ற குழந்தைகளுடன் பழக விட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு இடையே சகோதரத்துவம், உதவும் மனப்பான்மை வளரும்.
Leave a Reply