புதுடில்லி: பொய் சொன்ன பெண்ணின் ஜீவனாம்ச கோரிக்கை, செஷன்ஸ் கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டது; “வேலையில்லாமல் இருப்பதாக மனைவி பொய் சொல்கிறாள்’ என்பதை ஆதாரமாக காட்ட, கணவனுக்கு தகவல் உரிமை சட்டம் கைகொடுத்தது. டில்லியை சேர்ந்த இந்த தம்பதிகள் இடையே கருத்துவேறுபாடு முற்றி, கடந்தாண்டு மணமுறிவு ஏற்பட்டது.
கோர்ட்டில் முறைப்படி முறிக்கப்பட்டதை அடுத்து, “நான் வேலையில்லாமல் இருக்கிறேன்; என் குழந்தையை காப்பாற்ற எனக்கு மாதம் 6,000 ரூபாய் ஜீவனாம்சம் அளிக்க கணவனுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று முறையிட்டாள் மனைவி. மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த விசாரணையில், மனைவியின் கோரிக்கை ஏற்கப்பட்டு, ஜீவனாம்சம் அளிக்க கணவனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. “என் மனைவி வேலை செய்கிறாள். அவளுக்கு மாத சம்பளம் வருகிறது. அதனால், அவள் ஜீவனாம்சம் பெற தகுதியானவள் அல்ல’ என்று வாதிட்டார் கணவன். ஆனால்,ஆதாரம் எதுவும் காட்டாததால், அவர் கூற்று நிராகரிக்கப்பட்டது. அவரின் மனைவி, தபால் அலுவலகம் சார்பில் உள்ள அரசு ஏஜன்சி ஒன்றில் பணியாற்றுகிறார்; மாவட்டத்தில் சிறு சேமிப்பு வளர்ச்சி தொடர்பான பணிகளை கவனிக்கும் இந்த ஏஜன்சியில் கமிஷன் ஏஜன்ட்டாக பணியாற்றி வருகிறார். இதைத்தான் கோர்ட்டில் கணவன் சொன்னார். ஆனால், ஆதாரம் இல்லாமல் இருந்ததால், அவர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இருந்தும், கணவன் விடவில்லை. தகவல் உரிமை சட்டத்தின் உதவியை நாடினார். அரசு அலுவலகம் என்பதால், மனைவி வேலை செய்வது தொடர்பாக உறுதி செய்ய தகவல் உரிமை சட்டத்தின் படி மனு செய்தார். தபால் அலுவலக ஏஜன்சியில் மனைவி வேலை செய்வது, மாத சம்பளம் பெறுவது தொடர்பான ஆதார ஆவண நகல் கிடைத்தது. இதையடுத்து, மீண்டும் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு செய்தார் கணவன்.அவர் அளித்த ஆதாரத்தை பரிசீலித்த கோர்ட், மனைவிக்கு அளிக்க உத்தரவிட்ட ஜீவனாம்சத்தை ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செஷன்ஸ் கோர்ட்டில் மனைவி அப்பீல் செய்தார். இதை நிராகரித்த செஷன்ஸ் நீதிபதி,”மனைவிக்கு வேலை இருக்கிறது. அதில் வரும் வருமானத்தை வைத்து மகளை காப்பாற்ற முடியும்’ என்று கூறியுள்ளார்.
Leave a Reply